» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சீல் வைக்க எதிர்ப்பு : தனியார் பள்ளி மாடியில் ஏறி 5 மாணவர்கள் தற்கொலை மிரட்டல்

ஞாயிறு 24, ஆகஸ்ட் 2025 10:18:06 AM (IST)

சங்கரன்கோவில் அருகே நீதிமன்ற ஊழியர்கள் ‘சீல்’ வைக்க வந்ததால் தனியார் பள்ளி மாடியில் ஏறி 5 மாணவர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளி நிர்வாகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதாகவும், அதை திருப்பி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து நிதி நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பள்ளியை ‘சீல்’ வைக்க உத்தரவிட்டது. அதன்பேரில் நிதி நிறுவன அதிகாரிகள், வக்கீல் ஆணையர் தலைமையில் வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் நேற்று பள்ளிக்கு ‘சீல்’ வைக்க வந்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் விளையாட்டு பயிற்சிக்கு அந்த பள்ளி மாணவ-மாணவிகள் சிலர் வந்திருந்தனர். இதற்கிடையே ‘சீல்’ வைக்க வருவதை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கூடத்திற்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்கள், ‘சீல்’ வைக்க வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த சின்னகோவிலாங்குளம் போலீசார், பள்ளி தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால் அங்கிருந்த அதிகாரிகளை தவிர மற்ற அனைவரையும் பள்ளியில் இருந்து வெளியேற்றினார்கள்.

பின்னர் பள்ளி அலுவலக பூட்டை உடைத்து கோர்ட்டு ஊழியர்கள் ‘சீல்’ வைக்க முயன்றனர். அப்போது 5 மாணவர்கள் திடீரென்று பள்ளியில் மாடிக்கு விரைவாக ஏறினார்கள். அவர்கள் பள்ளிக்கு ‘சீல்’ வைக்கக்கூடாது என்று கூறி தற்ெகாலை மிரட்டல் விடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கீழே இறங்கினார்கள். பின்னர் பள்ளிக்கு கோர்ட்டு ஊழியர்கள் ‘சீல்’ வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory