» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழாவில் சப்பர பவனி கோலாகலம்: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

புதன் 6, ஆகஸ்ட் 2025 8:31:46 AM (IST)



தூத்துக்குடி பனிமயமாதா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான அன்னையின் சப்பர பவனி கோலாகலமாக நடந்தது. இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடியில் உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதாவின் 443-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஜெபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான அன்னையின் சப்பர பவனி நேற்று நடந்தது. இதனையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி, 5.30 மணிக்கு 2-வது திருப்பலி, காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர்.

9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமையில் தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்கான சிறப்பு திருப்பலியும், 10 மணிக்கு முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்கான சிறப்பு திருப்பலியும், பகல் 12 மணிக்கு தூத்துக்குடி மண்ணில் பிறந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து நிறைவேற்றிய சிறப்பு நன்றித் திருப்பலியும், மாலை 5 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும் நடந்தது.

இரவு 7 மணியளவில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி தொடங்கியது. பேராலய வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பனிமய மாதா அன்னையை பக்தர்கள் நகர வீதிகளில் பவனியாக எடுத்து வந்தனர். அப்போது, ஆலயத்தை சுற்றிலும் மக்கள் வெள்ளம் போல் திரண்டு இருந்தனர். ஏராளமானவர்கள் சப்பரத்தை தூக்கி வந்தனர். பவனி வந்த அன்னையை வரவேற்கும் வகையில் இருபுறமும் கட்டிடங்களில் நின்றும் திரளானவர்கள் தரிசனம் செய்தனர். 

இதனால் அன்னையின் சப்பரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. சாதி, மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் பூக்களை தூவினர். சப்பர பவனி செயின்ட் பீட்டர் தெரு, மணல் தெரு, எம்பரர் தெரு, பெரைரா தெரு, பிரெஞ்ச் சாப்பல் தெரு, ஜி.சி.சாலை, வி.இ.சாலை, தெற்கு கடற்கரை சாலை போன்ற முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆலயத்தில் நிறைவடைந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.

மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. திருவிழாவால் தூத்துக்குடி மாநகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டது. தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஆலயத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திருவிழா ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை ஸ்டார்வின், உதவி பங்குத்தந்தை பிரவீன் ராசு, அருட்சகோதரர் மிக்கல் அருள்ராஜ் மற்றும் பங்கு பேரவையினர், பக்த சபையினர், பங்கு இறைமக்கள் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து

கணபதி மா.Aug 6, 2025 - 12:30:09 PM | Posted IP 172.7*****

மரிய மாதாவின் அருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory