» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வாய்ப்பினை நன்றாக பயன்படுத்தி வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும்: ஆட்சியர் அறிவுரை!

வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:22:38 PM (IST)



தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள வாய்ப்பினை நன்றாக பயன்படுத்தி வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென மாணவ மாணவியரிடம் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவுரை வழங்கினார். 

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பள்ளிக்கல்வித்துறை, வேலைவாய்ப்பு துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளியில் பயின்று தேர்ச்சிபெற்ற மாணவ மாணவியர்களுக்கான "நான் முதல்வன் உயர்வுக்கு படி" திட்ட முகாமானது இன்றுமாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.

இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, மாணவ மாணவியர்களிடையே பேசுகையில்- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி "நான் முதல்வன் உயர்வுக்கு படி" என்ற திட்டத்தின் கீழ் 2023-2024 மற்றும் 2024-2025 கல்வியாண்டில் 12ம் வகுப்பில் தேர்ச்சிபெறாத, தேர்வு எழுதாத, மற்றும் உயர்கல்வி படிப்பதற்கு விண்ணப்பிக்காத மாணவர்களை கண்டறிந்து, உயர்கல்வி படிப்பதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இன்று மார்த்தாண்டம் கல்வி மாவட்டம் அளவில் "நான் முதல்வன் உயர்வுக்கு படி" திட்டமானது நடைபெறுகிறது. 

இம்முகாமின் மூலம், எந்த கல்லூரியை தெரிவு செய்வது மற்றும் எந்த கல்லூரியில் படித்தால் அரசின் நல திட்டங்களை முழுமையாக மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும், சிறந்த கல்லூரியை தெரிவு செய்வது எப்படி, மற்றும் சிறந்த கல்லூரியில் படிப்பதினால் எத்தகைய வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள இயலும் என்பது சார்ந்த வழிகாட்டுதல்கள் மற்றும் மாணவர்களின் ஐயங்கள் சார்ந்த தெளிவுரைகள் வழங்கப்படும். 

உயர்கல்வியை தொடர்வதற்கான வங்கி கடன் சார்ந்த தெளிவுரைகளும் இப்பயிற்சி மூலம் வழங்கப்படும். மேலும் மாணவர்கள் தேர்வு செய்து, சேர விரும்பும் கல்லூரிகள் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளதா என கேட்டு, தெரிந்து கொண்டபின் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தேவைப்பட்டால் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மூலம் கல்வி உதவித்தொகை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மருத்துவ கல்வி நிறுவனங்களில் 2 ஆண்டு மருத்துவ டிப்ளோமா படிப்புகள் மற்றும் ஓர் ஆண்டு மருத்துவ சான்றிதழ் படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றது. இதில் சேர்வதற்க்காக தமிழ்நாடு அரசு தனி கவுன்சிலிங் நடத்துகின்றது. 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். 

மருத்துவ துறையில் பிஎஸ்சி இதயம் சார்ந்த தொழில்நுட்பம், பி.எஸ்சி விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொழில்நுட்பம், பிஎஸ்சி டயாலசிஸ் டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் உள்ளன. இந்தியாவை பொறுத்தவரையில் எய்ம்ஸ் உள்ளிட்ட முன்னனி மருத்துவமனைகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பணி வாய்ப்பை பெறமுடியும். இதேபோன்று பொறியியல் படிப்புகள், கலை மற்றும் அறிவியல் படிப்புகள் ஏராளமாக உள்ளன. உங்களுக்கு விருப்பமான படிப்பை தேர்ந்தெடுத்து, படியுங்கள். 

2024-2025-ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் சுமார் 24 ஆயிரம் மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 23 ஆயிரம் மாணவ மாணவியர்கள் பொறியியல் உட்பட பல்வேறு மேற்படிப்பில் சேர்ந்துள்ளார்கள். இதுவரை எந்த கல்லூரியிலும் சேராமல் மீதமுள்ள சுமார் ஆயிரத்திற்குட்பட்ட மாணவ மாணவியர்களை கண்டறிந்து அனைவரும் மேற்படிப்பினை தொடர வேண்டும் என்ற நோக்கில் தகுதியான படிப்பினை தேர்ந்தெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே இம்முகாமின் நோக்கமாகும்.

குறிப்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முன்னோடி வங்கிகள் மூலமாக ரூ.6 இலட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் பரிந்துரையின் படி கல்லூரியின் கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கேற்ப கடன் உதவி வழங்கப்படுகிறது. கல்லுரி படிப்பை முடித்த ஆறு மாத காலத்திற்கு பின் கல்வி கட்டணத்தை திருப்பி செலுத்த அவகாசம் வழங்கப்படுகிறது என முன்னாடி வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்கள். 

குறிப்பிட்ட படிப்பு படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று எண்ணாமல் வேறு படிப்புகளை படிக்கவும் மாணவ மாணவியர்கள் முன் வர வேண்டும். உங்களுடைய குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை அறிந்து கொண்டு கற்பனை உலகில் உங்கள் கவனத்தை செலுத்திக் கொள்ளாமல் எதார்த்தமாக சிந்தித்து விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடனும் பயின்று பெற்றோர் உட்பட அனைவருக்கும் நல்ல புகழினை தேடித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உதாரணமாக இரணியல் பேலசில் சித்தாள் வேலை செய்யும் சிறுவனுக்கு பெற்றோர் இல்லை. பாட்டியின் அரவணைப்பில் வசித்து வருகிறான். பொருளாதார அடிப்படை வசதி இல்லாத இந்த மாணவனுக்கு அரசு அலுவலர்கள் உதவியுடன் ஐ.டி.ஐ.-யில் சேர்த்துள்ளார்கள். தொடர்ந்து ஆசிரியர் வீட்டில் தங்கி பயின்று வருகிறான். எனவே மாணவ மாணவியர்கள் அனைவரும் உங்களுடைய கவனத்தை சிதறடிக்காமல் ஒரே சிந்தனையுடன் கல்வி பயில வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

பள்ளி படிப்பை முடித்த மாணவ மாணவியர்களின் உயர்கல்வி பயில மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு அதிக வாய்ப்புகளை வழங்கி உள்ளது. இந்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்தி வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பேசினார்கள். 

முன்னதாக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட சமூகநலத்துறை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அரசு கலை மற்றும் அறிவயில் கல்லூரி முதல்வர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குநர், கோணம் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் உள்ளிட்டவர்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும் படிப்புகள் குறித்தும் மாணவ மாணவியர்களிடையே பேசினார்கள். 

முகாமில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஷெர்லின் மேரி (மார்த்தாண்டம்), ஜெயராஜ் (நாகர்கோவில்), உதவி இயக்குநர் (திறன்மேம்பாடு) லட்சுமிகாந்தன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் அந்தோணியம்மாள், மாவட்ட சமூக நலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் எவர்லின சுபா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பள்ளிக்கல்வித்துறை) சாரதா, துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், வங்கியாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory