» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை மாவட்டத்தில் 97.98% எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்: ஆட்சியர் சுகுமார் தகவல்!

திங்கள் 1, டிசம்பர் 2025 12:43:02 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்கள் 97.98% இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்தார். 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (01.12.2025) தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் காலநீட்டிப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், தலைமையில் நடைபெற்றது

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர் பொது (தேர்தல்) அவர்களின் அறிவுரையின்படியும், திருநெல்வேலி மாவட்டத்தில், 01.01.2026 - ஆம் தேதியினை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தினை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையமானது, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தினை மேற்கொள்ள கால அட்டவணை மாற்றியமைத்து வெளியீட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பான திருத்தியமைக்கப்பட்ட கால அட்டவணை பின்வருமாறு:-

நடவடிக்கைகள் கால அவகாசங்கள்

1. கணக்கெடுப்பு காலம் 11.12.2025 (வியாழன்)-க்குள்

2. வாக்குச்சாவடி மறுவரையறை / வகைப்படுத்துதல் 11.12.2025 (வியாழன்)-க்குள்

3. கட்டுப்பாட்டு பட்டியலினை புதுப்பித்தல் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலினை தயார் செய்தல் 12.12.2025 (வெள்ளி) முதல் 15.12.2025 (திங்கள்) வரை

4. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் 16.12.2025 (செவ்வாய்)

5. கோரிக்கைகளையும் மற்றும் மறுப்புரைகளையும் பெறுதல். 16.12.2025 (செவ்வாய்) முதல் 15.01.2026 (வியாழன்) வரை

6. அறிவிப்பு காலம் (வெளியீடு / கேட்டல் மற்றும் சரிபார்த்தல்) : வீடு வீடாக சென்று பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களின் மீது வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆணை பிறப்பித்தல் மற்றும் கோரிக்கைளும் மற்றும் மறுப்புரையாகவும் பெறப்பட்டவைகளை முடிவு செய்தல். 16.12.2025 (செவ்வாய்) முதல் 07.02..2026 (சனி) வரை

7. இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின் ஆரோக்கிய படிநிலைகளை சரிப்பார்த்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட ஆணையத்தின் ஒப்புதலினைப் பெறுதல். 10.02.2026 (செவ்வாய்) க்குள்

8. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் 14.02.2026 (சனி)

மேலும், இப்பணியினை மேற்கொள்ளும் போது, வாக்காளர் பதிவு அலுவலர்கள், எந்த ஒரு தகுதியான வாக்காளரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதிலிருந்து விடுபட கூடாது என்றும், தகுதியற்ற நபர்களை, வாக்காளராக சேர்க்க கூடாது எனவும் அறிவுரை வழங்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களை BLO மொபைல் செயலில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 01.12.2025 அன்று காலை 8.00 மணி வரை மொத்தம் உள்ள 14,18,325 வாக்காளர்களில் 13,89,708 வாக்காளர்களின் விபரங்கள் அதாவது 97.98% வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கண்டறிய இயலாதவர்கள் / நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் / இறந்தவர்கள் / இரட்டைப்பதிவு கொண்டவர்கள் (Absent/Shifted/ Death / Duplicate and Double Entry) என்ற வகைப்பாட்டில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் 47,598 (15.56%) என்ற எண்ணிக்கையிலும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 46,461 (17.83%) என்ற எண்ணிக்கையிலும், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 36,213 (12.94%) என்ற எண்ணிக்கையிலும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 57,567 (19.29%) என்ற எண்ணிக்கையிலும், இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 45,625 (16.67%) என்ற எண்ணிக்கையிலும் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட விபரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களும் ஒப்பிட்டு சரிபார்த்து ஒப்புதல் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பான பணிகளில், ஈடுபடும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் உரிய ஒத்துழைப்பு நல்கிடுமாறு அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கேட்டுக்கொண்டுள்ளார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் பிரியா, சேரன்மகாதேவி கோட்டாட்சியர் (பொ) சிந்து, தேர்தல் வட்டாட்சியர் முருகன், சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory