» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகளிர் விடுதிக்குள் புகுந்து மனைவி வெட்டிக் கொலை : நெல்லை வாலிபர் வெறிச்செயல்!

திங்கள் 1, டிசம்பர் 2025 8:31:41 AM (IST)

கோவையில் கள்ளக்காதல் விவகாரத்தில், மகளிர் விடுதிக்குள் புகுந்து மனைவியை வெட்டி கொலை செய்த நெல்லையை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் தருவையை சேர்ந்தவர் பாலமுருகன் (34), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவை கணபதியை சேர்ந்த ஸ்ரீபிரியா (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 1½ வயதில் மகள் உள்ளனர். பாலமுருகன் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் சொந்த ஊரில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

கணவன்-மனைவி இடையே மகிழ்ச்சியாக சென்ற வாழ்க்கை, கள்ளக்காதல் காரணமாக திசைமாறி சென்றது. பாலமுருகனின் நெருங்கிய உறவினருடன் ஸ்ரீபிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, 2 பேரும் ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றி வந்து உள்ளனர்.

இதை அறிந்த பாலமுருகன் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஸ்ரீபிரியா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோவை வந்து தனது பெற்றோர் வீட்டில் தங்கினார்.

அப்போது அவருடைய கள்ளக்காதல் கோவையிலும் தொடர்ந்தது. அதை பார்த்த பெற்றோர், ஸ்ரீபிரியாவை இனிமேல் வீட்டுக்கு வரக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அவர் குழந்தைகளை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு தனியாக வந்து விட்டார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கி இருந்து ஒரு துணி கடையில் வேலை செய்து வந்தார்.

இதற்கிடையே, கள்ளக்காதலனுடன் ஸ்ரீபிரியா அதிகளவில் சுற்றுவதை அறிந்த பாலமுருகன், ஸ்ரீபிரியாவை தன்னுடன் சொந்த ஊருக்கு அழைத்துச்செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் நேற்று அதிகாலையில் கோவை வந்தார். பின்னர் அவர், தனது மனைவியின் உறவினரை அழைத்துக் கொண்டு ஸ்ரீபிரியா தங்கி இருந்த மகளிர் விடுதிக்கு சென்றனர்.

விடுதியின் வரவேற்பு அறையில் கணவரை பார்த்த ஸ்ரீபிரியா, நான்தான் உங்களுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என்று கூறிவிட்டுதானே இங்கு வந்தேன். பின்னர் ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர், நாம் இனிமேல் சண்டைபோடாமல் சந்தோஷமாக குடும்பம் நடத்தலாம், என்னுடன் வா, சொந்த ஊருக்கு செல்வோம் என்று கூறி உள்ளார்.

அதை கேட்ட ஸ்ரீபிரியா, இனிமேல் நான் உன்னுடன் வரமாட்டேன், தயவு செய்து இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஸ்ரீபிரியா கழுத்தில் ஓங்கி சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் கீழே சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்ததும், அதிர்ச்சி அடைந்த விடுதியில் இருந்த பெண்கள் அலறியடித்தபடி ஓடினர்.

மனைவியை கொலை செய்த பாலமுருகன் தப்பி ஓடவில்லை. அவரது செல்போனை எடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் உடல் தெரியும்படி ‘செல்பி’ எடுத்து அதில் துரோகத்தின் சம்பளம் மரணம் என எழுதி ஸ்டேட்டஸ் வைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory