» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கைது: கார்-பைக் பறிமுதல்

வெள்ளி 31, ஜனவரி 2025 8:43:28 AM (IST)

நாகர்கோவிலில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்ற 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாகர்கோவில் கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்த் தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் இரவு ஒழுகினசேரி கீழதத்தையார்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற 5 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

ஆனால் வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களின் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை சோதனையிட்டனர். அதில் சிறு, சிறு பொட்டலங்களில் 1½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கார், மோட்டார் சைக்கிளுடன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் பிடிபட்ட வாலிபர்களை கோட்டார் காவல் நிலையம் அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பிடிபட்டவர்கள், மேலராமன்புதூர் சைமன் நகரை சேர்ந்த தீபக் பிந்த்ரோ (25), தடிக்காரன்கோணத்தை சேர்ந்த ஆகாஷ் (23), ரத்னபுரத்தைச் சேர்ந்த ஜோசப் ராஜ்(23), திருப்பதிசாரத்தை சேர்ந்த கிருஷ்ணன் (22), வடக்கு நெசவாளர் காலனியை சேர்ந்த ஹம்சவர்சன் (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆகாஷ் மீது ஏற்கனவே ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி காவல் நிலையத்திலும், ஜோசப் ராஜ் மீது கன்னியாகுமரி காவல் நிலையத்திலும் திருட்டு வழக்கு இருப்பது தெரியவந்தது. அதே சமயத்தில் கஞ்சாவை பெங்களூருவில் இருந்து வாங்கி சிறு, சிறு பொட்டலங்களாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. மேலும் இந்த கும்பலுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory