» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பூட்டிய வீட்டுக்குள் 5 மாதங்களாக பிணமாக கிடந்த தந்தை-மகள்: உடன் வசித்த டாக்டர் கைது!
வெள்ளி 31, ஜனவரி 2025 8:41:33 AM (IST)
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் பூட்டிய வீட்டுக்குள் 5 மாதங்கள் தந்தை-மகள் பிணமாக கிடந்தனர். இந்த வழக்கில் அவர்களுடன் வசித்து வந்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சாமுவேல் சங்கர் (78). அவருடைய மகள் சிந்தியாவும் (37) உடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். வீடு வெளிப்புறமாக பூட்டி இருந்தது. போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
ஏ.சி. இயங்கிக்கொண்டிருந்ததால் வீடு முழுவதும் குளிர்ந்த நிலையில் இருந்தது. பூட்டிய வீட்டுக்குள் சிந்தியாவும், அவரது தந்தை சாமுவேல் சங்கரும் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருவரதும் உடலையும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சென்னையில் இருந்து வந்த தடயவியல் உதவி இயக்குனர் தாரா, தடயங்களை சேகரித்து சென்றார். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டம், ஓரிக்கை, பாரதிதாசன் நகரைச் சேர்ந்த குழந்தைகள் நல டாக்டரான சாமுவேல் எபினேசர் (34) என்பவரும் ஒன்றாக வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர் சாமுவேல் எபினேசரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாமுவேல் சங்கர். அவருடைய மகள் சிந்தியா. இவர், திருமணமாகி கணவரை பிரிந்து தந்தையுடன் வாழ்ந்து வந்தார். குழந்தை இல்லை. சிந்தியா, தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. சாமுவேல் சங்கருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது. இதனால் அவர் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தந்தையை சென்னையில் உள்ள மற்றொரு பிரபல தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.
அப்போதுதான் டாக்டர் சாமுவேல் எபினேசரை சிந்தியா சந்தித்தார். இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் விசாரித்து கொண்டனர். அதில் இருவரும் கோயம்புத்தூரில் ஒரே பள்ளியில் படித்ததும், சிந்தியாவுக்கு டாக்டர் சாமுவேல் எபிநேசர் ஜூனியர் என்பதும், அவர், ஆஸ்திரியா நாட்டில் டாக்டருக்கு படித்து இருப்பதும் தெரிந்தது.
சிந்தியா, தந்தைக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டியது இருப்பதால் அடிக்கடி வேலூரில் இருந்து சென்னை வந்து செல்வதை அறிந்த சாமுவேல் எபிநேசர், தானே சாமுவேல் சங்கருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதாக கூறியதுடன், திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வாடகைக்கு வீடு பார்த்து குடியிருக்க வைத்துள்ளார்.
அதே அடுக்குமாடி குடியிருப்பின் மற்றொரு வீட்டில் டாக்டர் சாமுவேல் எபினேசர் தங்கி இருந்தார். இன்னும் திருமணம் ஆகாத அவர் தனியாக வசித்து வந்தார். அதன்பிறகு அதே அடுக்குமாடி குடியிருப்பின் மற்றொரு வீட்டில் சிந்தியா, அவருடைய தந்தை ஆகியோருடன் சாமுவேல் எபிநேசர் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 6-ந் தேதி சாமுவேல் சங்கர் சிகிச்சை பலனின்றி வீட்டிலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. தந்தையை காப்பாற்ற முடியாத ஆதங்கத்தில் இருந்த சிந்தியாவுக்கும், டாக்டர் சாமுவேல் எபிநேசருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் டாக்டர் சாமுவேல் எபினேசர் தான் வெளிநாடு செல்ல போவதாக கூறியதால் ஏற்பட்ட சண்டையில் சிந்தியாவை கீழே தள்ளி விட்டதில் தலையில் காயம் அடைந்த சிந்தியா இறந்து விட்டதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாமுவேல் எபிநேசர், தந்தை-மகள் இருவரது உடல்களையும் அந்த அறையில் வைத்து பூட்டினார். ஏ.சி. எந்திரத்தை இயக்கி விட்டு வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சென்றுவிட்டார். அவ்வப்போது அந்த வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு சென்றதாகவும் தெரிகிறது. மேலும் ஊரில் உள்ள உறவினர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க சிந்தியாவின் செல்போனை எடுத்து அவரது உறவினர்களுக்கு ‘வாய்ஸ் காலில் மிஸ்டு கால்’ கொடுத்து விட்டு, பின்னர் ‘வாட்ஸ் அப்பில்’ கால் செய்தால் எடுப்பதில்லையா? என குறுந்தகவல் அனுப்பி, சிந்தியா உயிருடன் இருப்பது போன்று நாடகமாடி வந்துள்ளார்.
ஆனால் இருவரும் இறந்து 5 மாதத்துக்கு பிறகு, அழுகிப்போன அவர்களது உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதால் தற்போது போலீசாரிடம் மாட்டிக்கொண்டார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். தந்தை-மகள் இறந்ததும் உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க ரசாயனத்தை ஊற்றி இருக்கலாம் என தெரிகிறது. மேலும் ஏ.சி. எந்திரத்தை இயக்கியதாலும் இருவரது உடல்களும் அழுகி இருந்தாலும் 5 மாதங்களாக துர்நாற்றம் வெளியே வரவில்லை என தெரிகிறது.
இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் தலையில் ஏற்பட்ட காயத்தால் சிந்தியா இறந்ததாகவும், சாமுவேல் சங்கர் இயற்கை மரணம் அடைந்ததாகவும் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களுடன் வசித்து வந்த டாக்டர் சாமுவேல் எபிநேசரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.