» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை குறைந்தது : ஒரு கிலோ ரூ.210-க்கு விற்பனை
திங்கள் 27, ஜனவரி 2025 8:55:47 PM (IST)
குமரி மாவட்டத்தில் பூண்டு வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.210-க்கு விற்பனை ஆனது.
தமிழகத்தில் நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பூண்டு பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக, நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாலும், அளவில் சற்று பெரியது என்பதாலும் இல்லத்தரசிகள் அதிகம் விரும்புவார்கள். இதுபோக, தமிழகத்தின் தேவைக்கு ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மத்தியபிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
ஆனால் வெளி மாநிலங்களில் மழை பொழிவு காரணமாக பூண்டு வரத்து குறைந்து விலை அதிகமாக இருந்தது. முக்கியமாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பூண்டு விலை அதிகமாக இருந்தது. டிசம்பர் தொடக்கத்தில் விலை உச்சம் தொட்டது. அதாவது ஒரு கிலோ பூண்டு ரூ.450-க்கு விற்பனை ஆனது. இதனால் இல்லத்தரசிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
இந்த நிலையில் வெளி மாநிலங்கள் மழை பொழிவு குறைந்து பூண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் புதுப்பூண்டு வரத்து தொடங்கி இருக்கிறது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் புதுப்பூண்டு வரத்து அதிகரித்து இருப்பதால் அதன் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் கோட்டார் மார்க்கெட்டில் ஒரு கிலோ பூண்டு நேற்று ரூ.210-க்கு விற்பனை ஆனது. அதுவே சில்லறை கடைகளில் ரூ.250 முதல் ரூ.280 வரை விற்கப்பட்டது.
இதே போல கடுகு, மிளகு ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.150-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கடுகு தற்போது ரூ.90-க்கும், ரூ.710-க்கு விற்கப்பட்ட மிளகு ரூ.670-க்கும் விற்பனை ஆனது. அதே சமயம் சீரகம் விலை சற்று உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.330-க்கு விற்பனையான ஒரு கிலோ சீரகம் ரூ.30 உயர்ந்து ரூ.360-க்கு விற்கப்பட்டது. மற்றபடி மளிகை பொருட்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. திருமண நிகழ்ச்சிகள், பண்டிகைகள் இல்லாததால் மளிகை பொருட்கள் விலை இன்னும் ஒரு சில மாதங்களுக்கு குறைந்தே காணப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.