» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தலைக்கவசம் அணிந்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும் : ஆட்சியர் வேண்டுகோள்
செவ்வாய் 28, ஜனவரி 2025 3:25:59 PM (IST)
குமரி மாவட்டம் 100 சதவீதம் விபத்தில்லா மாவட்டமாக மாற்றிட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என தேசிய சாலைப்பாதுகாப்பு வார நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைங்கிணங்க 36வது தேசிய சாலைப்பாதுகாப்பு வார விழாவையொட்டி ஜனவரி 1 முதல் 31.01.2025 வரை சாலைப்பாதுகாப்பு வார விழா குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்ஒருபகுதியாக மாவட்ட வட்டார போக்குவரத்து கழகம் (நாகர்கோவில்) கழகம் சார்பில் வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர விழிப்புணர்வு பேரணி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து கழகத்தின் சார்பில் விபத்துக்கள் இல்லா வாகன ஓட்டுநர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்துகொண்டு, பரிசுகள் வழங்கி பேசுகையில்-
அதிக தொழில்நுட்பம் நிறைந்த அதிநவீனமான உலகில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் வாகனங்கள் வாங்குவது மற்றும் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டுள்ளார்கள். சாலைப்பாதுகாப்பு என்பது சாலையை பயன்படுத்தும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதாகும். மேலும் நீங்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விதிகளை பின்பற்றமால் சாலைகளில் வாகனங்களை அதி வேகமாக செலுத்துவதாலும், அலைப்பேசியில் பேசிக்கொண்டு கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுவதாலும், மது போதையினால் வாகனங்களை ஓட்டுவதாலும், அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் சாலைகளில் சாகசம் செய்வதை சமூக வலைதளங்களில் பகிர்வதால் மற்ற இளைஞர்களும் இதுபோன்ற சாகசகங்களில் ஈடுபடுகின்றனர். எனவே அதிகப்படியான உயிர்பலி ஏற்படுகின்றன.
நம்முடைய கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் 2023ம் ஆண்டில் 1471 விபத்துக்களும், 2024ம் ஆண்டில் விபத்துக்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு 1414 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற விபத்துக்களில் 2023ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 18-35 வயதுக்குட்பட்ட இளம் வயத்தினர் 335 பேரும், 2024ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 305 பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 99 சதவீதம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தான் ஏற்படுகின்றன. குறிப்பாக இளைஞர்கள் தான் அதிகம் சாலைவிபத்துக்களில் பாதிக்கப்படுகின்றன. மேலும் விபத்துக்கள் இரவு நேரங்களில் தான் அதிகம் ஏற்படுகின்றன. மேலும் நம்முடைய மாவட்டத்தை பொறுத்தவரை நாள்தோறும் சராசரியாக 3 மரணமில்லா சாலை விபத்துக்களும், 1 மரண சாலை விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.
எனவே பொதுமக்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், சமூதாயத்தில் தங்களது பொறுப்பினை அறிந்து சாலைவிதிகளை கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் தனியாக வாகனம் ஓட்டினாலும் அல்லது உங்கள் குடும்பத்தினருடன் வாகனம் ஓட்டினாலும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது எப்போது உங்களின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
மேலும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதன் மூலம் உயிரை மற்றும் விபத்துக்களை தவிர்க்கலாம். கண்டிபாக தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறினால் வழங்கப்படும் அபராதங்கள், தண்டனைகள் குறித்து பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து விபத்துக்களை தவிர்க்கும் வகையில் வாகனம் ஓட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தை 100 சதவீதம் விபத்தில்லா மாவட்டமாக மாற்றிட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் முன்வர வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவருக்கும் சாலைப்பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார். நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில்; வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, வாகன ஆய்வாளர்கள் சக்திவேல் (நாகர்கோவில்), ராஜேஷ் (மார்த்தாண்டம்), கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி, கோட்ட மேலாளர் ஜெரோலின், துறை அலுவலர்கள், நான்கு சக்கர மற்றும் இருசக்கர வானக ஓட்டிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.