» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் போலீஸ் அதிகாரி போல் பேசி ரூ.96½ லட்சம் மோசடி: 3 போ் கைது

செவ்வாய் 14, ஜனவரி 2025 10:11:28 AM (IST)

ஏ.ஐ.தொழில்நுட்பத்தால் போலீஸ் அதிகாரி போல் பேசி குமரியை சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியரிடம் ரூ.96.54 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவிலை சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரிடம் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரூ.70 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தன்று அவரது செல்போன் எண்ணுக்கு வீடியோ காலில் ஒரு அழைப்பு வந்தது. அதில் மறுமுனையில் பேசியவர் போலீஸ் அதிகாரி உடையில் இருந்துள்ளார். தான் மும்பை போலீஸ் அதிகாரி என்றும், நீங்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதால் தற்போது உங்களை வீட்டு காவலில் (டிஜிட்டல் கைது) வைத்திருப்பதாக போலியான பிடி ஆணையை காட்டி மிரட்டியுள்ளார்.

இதை அவர் உண்மை என்று நம்பியதோடு, 'இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?' என்று பதற்றத்துடன் கேட்டுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம ஆசாமி உங்களிடம் ரிசர்வ் வங்கி அதிகாரி பேசுவார் என்று கூறி அழைப்பை துண்டித்தார்.

பின்னர் ரிசர்வ் வங்கி அதிகாரி பேசுவதாக மற்றொரு மர்ம ஆசாமி பேசியுள்ளார். உடனடியாக வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அனுப்பும்படியும், அதை சரிபார்த்துவிட்டு திருப்பி அனுப்புவதாகவும் கூறினார். ஏற்கனவே அச்சத்தில் இருந்த அவர் உடனே தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.70 லட்சத்தை மர்ம ஆசாமி கொடுத்த வங்கி கணக்குக்கு அனுப்பினார். ஆனால் பணம் அனுப்பிய சிறிது நேரத்தில் மர்ம ஆசாமி வீடியோ அழைப்பை துண்டித்துவிட்டார். அந்த எண்ணை மீண்டும் தொடர்பு கொண்டபோது அழைப்பு செல்லவில்லை. அப்போது தான் மர்ம ஆசாமி தன்னை ஏமாற்றி மோசடி செய்தது அவருக்கு தெரியவந்தது.

இதே போல ஓய்வுபெற்ற பேராசிரியரை மிரட்டி ரூ.26 லட்சத்து 54 ஆயிரத்து 47-ஐ மர்ம ஆசாமிகள் பறித்துள்ளனர். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் தனித்தனியாக நாகர்கோவிலில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரிடமும் மோசடி செய்தது 3 பேர் கொண்ட ஒரே கும்பல் என்பதும், அந்த கும்பல் ராஜஸ்தானில் பதுங்கி இருந்ததும் தொியவந்தது.

இதைத் தொடர்ந்து எஸ்.பி., ஸ்டாலின் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் போலீசார் ராஜஸ்தான் மாநிலம் சென்று 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள், ராஜஸ்தானை சேர்ந்த கிஷன் தாஸ் (19), ஜிவெட் குமார் (28) மற்றும் சுரேஷ்குமார் (31) என்பதும் தொியவந்தது. அவர்களை போலீசார் நேற்று முன்தினம் நாகர்கோவில் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குமரி மாவட்டத்தில் இதுபோன்ற மோசடிகள் ஏற்கனவே அதிகமாக அரங்கேறியுள்ளன. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி எஸ்.பி., ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். இந்த அறிவுரைகள் பலரையும் சென்று சேர்ந்த நிலையில் முதியவர்களை குறி வைத்து மோசடிகள் அரங்கேறுவது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கைதான 3 பேர் இதுபோல நிறைய பேரிடம் பண பறித்து இருப்பது தொியவந்துள்ளது. எனவே 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory