» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அகஸ்தீஸ்வரம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் திடீர் ஆய்வு!
சனி 5, அக்டோபர் 2024 12:30:32 PM (IST)
அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், லீபுரம், பஞ்சலிங்கபுரம் மற்றும் மகாராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புற பகுதிகளிலும், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையில் ஊரக உள்ளாட்சி துறை சார்பில் அனைத்து ஊராட்சிகளிலும் பல்வேறு வகையான திட்டங்களை திட்டி அவ்வூராட்சிகளை வளர்ச்சி பெற்று தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்றிடும் வகையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், லீபுரம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தின்கீழ் விஜயநாராயணபுரம் மூன்றாவது மடை சானல் தூர்வாரும் பணி 100 நாள் பணியாளர்கள் கொண்டு நடைபெற்று வருகிறது. இப்பணியில் மேற்கொள்ளும் பணியாளர்களின் வருகை பதிவேடு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேலை அடையாள அட்டைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இப்பணிகளை பருவமழைக்காலத்திற்கு முன் விரைந்து முடித்து விவசாயிகளுக்கு கடைமடை வரை தண்ணீர் கிடைத்திட உறுதி செய்திட வேண்டுமென துறை சார்ந்த அறுவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாச்சாளிகுளக்கரையில் 200 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்யப்பட்டது.
பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் வெள்ளப்பெருக்கு அபாயங்கள் ஏற்படாமலும், பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்தினை பெருக்கிடும் வகையில், ஊராட்சிக்குட்பட்ட அனைத்து நீர்நிலைகள் மற்றும் கடற்கரை பகுதிகள், சாலை ஓரங்களில் அதிக அளவிலான பனை மர விதைகளை தோட்டக்கலை துறையிடமிருந்தும், பொது மக்களிடமிருந்து பெற்று நடுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பஞ்சலிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் 2024-2025 திட்டத்தின் கீழ் சாந்தி அவர்களின் வீடு அஸ்திவார பணிகள் நடைபெற்று வருவதை நேரில் ஆய்வு செய்யப்பட்டதோடு, இக்கட்டிட பணிகளை தரமானதாகவும், உறுதித்தன்மையுடன் கட்டப்படுவதை உறுதிப்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பஞ்சலிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மகாத்மாகாந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் நரிக்குளம் நீர்வரத்து சானல் அமைக்கும் பணி பார்வையிடப்பட்டது. மேலும் மகராஜபுரம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் வட்டார அளவில் உள்ள Nursery பார்வையிடப்பட்டது.
கூடுதலான பணியாளர்களை கொண்டு அதிகமான எண்ணிக்கையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய அறிவுறுத்தப்பட்டது என்று ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் ரா.கனகபாய், உதவிப் பொறியாளர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.