» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரியில் கண்ணாடி தரைத்தள பால பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
சனி 21, டிசம்பர் 2024 8:40:53 AM (IST)
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை நடைபெற்று வரும் கண்ணாடி தரைத்தள பால பணியினை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணித்துறை அரசு கூடுதல் செயலாளர் மன்கத் ராம் சர்மா, நெடுஞ்சாலைகள் துறை அரசு செயலாளர் மரு.செல்வராஜ், ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, ஆகியோர் முன்னிலையில் இரண்டாவது நாளாக நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர், தெரிவிக்கையில்: நெடுஞ்சாலைத்துறை சார்பில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறை இணைக்கும் கண்ணாடி கூண்டு இழை பாலத்தின் தரைத்தளப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அன்று மாண்புதிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்று இரண்டாம் நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நான் பார்வையிட்டதோடு, சீரமைப்பு பணிகள் மற்றம் தரைத்தள பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு இப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கியதோடு, கட்டுமான பணிகளின் உறுதி தன்மையினை உறுதிப்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அவர்களும் தொடர்ந்து நடைபெற்று வரும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொள்வார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
தொடர்ந்து கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் சுற்றுலா பயணிகள் நுழைவு சீட்டு எடுக்க வரிசையில் நிற்கும் நிழற்குடை பழுதுடைந்து உள்ளதாலும், போதுமான அளவு இடவசதிகள் இல்லமால் இருந்ததால், சுற்றுலா பயணிகளின் நலன் கருதியும் பருவ சீதோசனங்களிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்காகவும், பழுதடைந்த நிழற்குடையினை சீரமைத்து, நுழைவு சீட்டு எடுப்பதற்கு செல்லும் பகுதிகளை அதிகரித்து நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
ஆய்வுகளில் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு ஆய்வாளர் பாஸ்கர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் ஆறுமுகம், துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.