» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டைகள் வழங்கல்? ஆட்சியர் அழகுமீனா விளக்கம்
புதன் 18, டிசம்பர் 2024 12:14:29 PM (IST)
குமரி மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டைகள் வழங்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : கன்னியாகுமரி மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டத்தில் 664 அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 62,976 மாணவ மாணவிகளுக்கு மதிய உணவுடன் தினசரி முட்டை வழங்கப்படுகிறது. விநியோகஸ்தகர் மூலம் வாரம் இரண்டு முறை பள்ளிகளுக்கு முட்டை வழங்கப்படுகிறது.
ஒரு மாதத்திற்கு சராசரியாக 13,85,032 முட்டைகள் வழங்கப்படுகிறது. முட்டைகள் எளிதில் உடைந்து அழுகக்கூடியது என்பதால் சம்பந்தப்பட்ட அமைப்பாளர்களை முட்டைகளை பரிசோதனை செய்த பின்னரே பெற்றிட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அமைப்பாளர்களும் அவ்வாறே முட்டைகளை பரிசோதனை செய்த பின்னரே அவித்து பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்குகின்றனர். உடைந்த மற்றும் அழுகிய முட்டைகள் இருப்பது தெரியவந்தால் உடனடியாக புதிய முட்டைகள் மாற்றி வழங்கப்படுகிறது. சமைக்கப்படும் உணவுகள் தினசரி ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் மூலம் சுவை பார்த்த பின்னரே பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
கடந்த 16.12.2024 அன்று குழித்துறை பெண்கள் நடுநிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்ட 197 முட்டைகளில் 5 முட்டைகள் உடைந்தும்/அழுகிய முட்டைகளும் மற்றும் குழித்துறை கிராம தொடக்கப்பள்ளிகளில் பெறப்பட்ட 96 முட்டைகளில் 1 உடைந்தும்/அழுகிய நிலையில் இருந்த விபரம் தெரிந்த உடன் விநியோகஸ்தர் மூலம் புதிய முட்டைகள் மாற்றி வழங்கப்பட்டுள்ளது. உடைந்த மற்றும் அழுகிய முட்டைகள் எதுவும் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை. கெட்டுப்போன முட்டைகள் உடனடியாக அழிக்கப்பட்டது. அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களுக்கு உரிய ஊட்டச்சத்து பெறுவதற்காகவே முட்டை வழங்கப்படுகிறது.
மேலும், இந்த திட்டம் நீண்ட காலங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கெட்டுப்போன முட்டைகள் குழந்தைகளுக்கு எப்போதுமே வழங்கப்பட்டதில்லை. அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொதுமக்கள் மத்தியில் பொய்யான தகவலை பரப்பி பெற்றோர்களுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கும் அச்சம் ஏற்படும் வகையில் ஊடகங்களில் தகவல் வெளியானது. வெளியானதை தொடர்ந்து துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, தக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது என ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.