» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சனி 5, அக்டோபர் 2024 10:52:24 AM (IST)

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழ்நாடு அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சிபெறாதவர் மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித்தகுதியை பதிவுசெய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்துவரும் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 01.10.2024முதல் 31.12.2024-ம் தேதி வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 30.09.2024 தேதியில் 5 ஆண்டுகள் நிறைவு செய்திருத்தல் வேண்டும். 31.12.2024 அன்று உச்சவயது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதுக்குள்ளும் மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு 40 வயதுக்குள்ளும் முடிவடையாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் 72,000/- ரூபாய்க்கு மிகைப்படாமல் இருத்தல் வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவுசெய்து 30.09.2024 தேதியில் ஒருவருடம் முடிவுற்றிருந்தால் போதுமானது. மேலும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வயதுவரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.

பொதுப்பிரிவு பதிவுதாரர்களைப் பொறுத்தவரை பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200/-ம், பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-ம், ப்ளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.400/-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600/-ம் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை பள்ளியிறுதி வகுப்பிற்கு கீழ் மற்றும் பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600/-ம் , ப்ளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.750/-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000/-ம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையினை பெற மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். அரசிடமிருந்து வேறு எந்தவகையிலும் எந்தவிதமான உதவித்தொகையும் பெறுவராக இருத்தல்கூடாது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து தொழிலாளர் பொது வருங்கால நிதி ஈட்டுறுதி அலுவலகத்தில் கணக்குஎண் பெற்றவராக இருத்தல் கூடாது. 

மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராகவே இருக்க வேண்டும். பள்ளிக்கல்வி/கல்லூரிக் கல்வி மற்றும் தொழில்சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கு தினமும் சென்று படிக்கும் மாணவ மாணவியராக இருக்கக் கூடாது. ஆனால் தொலைதூரக் கல்வி மற்றும் அஞ்சல்வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்த பதிவுதாரர்களுக்கும் வேலைவாய்ப்பற்றோர் நிவாரணம் பெற இயலாது. வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வாங்கினால் வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து தங்களது பரிந்துரைவாய்ப்பு பறிபோகுமோ என பதிவுதாரர்கள் அச்சப்படத் தேவயில்லை. உதவித்தொகை வழங்கப்படும் காலத்திலும் பதிவுதாரர்களது கல்வித்தகுதி, வயது மற்றும் பதிவுமூப்புக்குட்பட்டு அறிவிக்கப்படும் காலியிடங்களுக்கு தொடர்ந்து அரசின் விதிமுறைப்படி பரிந்துரைக்கு பரிசீலிக்கப்படும்.

எனவே, மேற்கூறிய தகுதி மற்றும் விருப்பமுடைய பதிவுதாரர்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ், மாற்றுக்கல்விச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக வேலைநாட்களில் நேரில் வருகைதந்து உதவித்தொகைக்கான விண்ணப் பபடிவம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பெற்றுக்கொண்டிருக்கும் பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

மூன்று ஆண்டுகளுக்கு குறைவாக இத்திட்டத்தின்கீழ் உதவித்தொகையை பெற்றுவரும் பயனாளிகள் இந்த உதவித் தொகையினை தொடர்ந்து பெறவேண்டுமானால் (மாற்றுத் திறனாளிகள் பொறுத்தவரையில் 10 ஆண்டுகள் தொடர்ந்து பெற வேண்டுமானால்) சுயஉறுதிமொழி (AFFIDAVIT) ஆவணத்தை ஒவ்வொரு வருடமும் அலுவலகத்தில் ஒப்படைப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

Evangaline mary tresaOct 5, 2024 - 01:02:06 PM | Posted IP 162.1*****

நான் கணவரை பிரிந்து வாழ்கிறேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory