» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சென்னை, நாகர்கோவில் உட்பட 11 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
செவ்வாய் 24, செப்டம்பர் 2024 11:58:23 AM (IST)
பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்கள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை, நாகர்கோவில் உட்பட 11 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று (செப்.24) சோதனை மேற்கொண்டனர்.
ஹிஷாப் உத் தஹீரிர் என்ற அமைப்புக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பேராசிரியர் உட்பட பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். சென்னை சைபர் கிரைம் போலீஸார் முதலில் இந்த வழக்கில் துப்பு துலக்கினர். பின்னர் இந்த வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது. அப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்தனர்.
இந்நிலையில், சென்னையில் 10 இடங்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு இடத்திலும், நாகர்கோயிலில் ஒரு இடம் என தமிழகம் முழுவதும் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஏழு கிணறில் ரகுமான் என்பவர் வீட்டிலும் நீலாங்கரை வெட்டுவாங்கேணியில் முகமது ரியாஸ், சையது அலி ஆகியோர் வீடுகளிலும், ராயப்பேட்டையில் முகமது அலி என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
இதற்கிடையே நாகர்கோவில் இளங்கடை தெற்கு புதுத்தெருவில் உள்ள முகமது அலி (62) என்பவர் வீட்டிலும் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார். அப்போது முகமது அலி வீட்டில் இல்லை. அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு இருந்த மடிக்கணினி மற்றும் ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டன. அதேபோல் புதுக்கோட்டையிலும் சோதனை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்றனர். ஆனால் சோதனை நடத்தாமல் புறப்பட்டு சென்றனர்.
தமிழ்நாட்டில் 11 இடங்களில் நேற்று நடைபெற்ற சோதனை தொடர்பாக என்.ஐ.ஏ. சார்பில் மாலை செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், ‘சென்னை, நாகர்கோவில் என 11 இடங்களில் நேற்று சோதனை நடந்தது. இதில் மின்சாதனப்பொருட்களும், கட்டுக்கட்டாக பணம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான புத்தகங்களும் சிக்கியுள்ளன’ என்று கூறப்பட்டிருந்தது.