» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி கண்ணாடி இழை தரைத்தளபாலம் பாதுகாப்பு பணிகள்: ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வியாழன் 16, ஜனவரி 2025 3:51:58 PM (IST)
கன்னியாகுமரி கண்ணாடி இழை தரைத்தளபாலம் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை முதல் அய்யன் திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி இழை தரைத்தளபாலம் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (16.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அய்யன் திருவள்ளுவர் சிலையை நிறுவி கடந்த 2000 ஆண்டு திறந்து வைத்தார்கள்.
உலக நாடுகளிலிருந்தும், வெளிமாநிலங்கள் வெளிமாவட்டங்களிலிருந்தும் வரும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளுர் பொதுமக்கள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும்போது அய்யன் திருவள்ளுவர் சிலையை காண வேண்டும் என்ற ஆவல் இருக்கும். ஆனால் நேரடியாக அருகில் சென்று காண முடியாமல் விவேகானந்தர் பாறையிலிருந்து கண்டுகளித்தனர். எனவே சுற்றுலாப்பயணிகளின் மனக்குறையை களைய வேண்டும் என்ற சீரிய நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் விவேகானந்தர் பாறை முதல் அய்யன் திருவள்ளுவர் சிலையினை இணைத்து சுற்றுலாப் பயணிகள் அய்யன் திருவள்ளுவரை கண்டு களித்திட ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை தரைத்தளம் பாலம் அமைத்து, கடந்த 30.12.2024 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
கண்ணாடி இழை தரைத்தள பாலம் திறந்து வைத்ததைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து அய்யன் திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை தரைத்தளபாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு பெருமிதம் அடைகின்றனர். மேலும் பொங்கல் உள்ளிட்ட விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை புரிவதால் அவர்களின் வசதிக்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்தின் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (16.01.2025) மற்றும் நாளை (17.01.2025) காலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அல்லாத நாட்களில் காலை 6.00 மணி முதல் இரவு 6.00 மணி வரை செயல்படும். மேலும் அய்யன் திருவள்ளுவர் சிலையினை காண வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் அவர்களுக்கு வழிகாட்டிட காவல்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக சுமார் 35 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு காலை 6 மணி முதல் இரவு வரை பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து இன்று கண்ணாடி இழை தரைத்தளம் பாலம் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் அய்யன் திருவள்ளுவர் சிலையினை காண வந்த சுற்றுலா பயணிகளில் சிலர் தாங்கள் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த போது அய்யன் திருவள்ளுவர் சிலையினை அருகில் சென்று காண முடியாமல் விவேகானந்தர் பாறையில் இருந்து மட்டுமே அய்யன் திருவள்ளுவர் சிலையை கண்டு களித்ததாகவும், தற்போது விவேகானந்தர் பாறை முதல் திருவள்ளுவர் சிலையினை இணைத்து கண்ணாடி இழை தரைத்தள பாலம் அமைத்ததன் வாயிலாக, அய்யன் திருவள்ளுவர் சிலையினை நேரில் சென்று பார்வையிட்டபோது, சிலையின் வடிவமைப்பு தங்களை பிரமிக்க வைத்தது எனவும், கருங்கலில் திருக்குறள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் செதுக்கியிருப்பதை வாசிக்கும் போது திருவள்ளுவரின் மேல் பற்று ஏற்படுவதோடு ஒரு மனிதனின் வாழ்க்கை நெறி எப்படி இருக்க வேண்டும் என்பதையும், சுற்றுச்சூழல், உழவு உள்ளிட்டவைகள் குறித்தும் தெரிந்து கொள்ள முடிகிறது. இது இளைய சமுதாயத்திற்கும் வருங்கால சமுதாயமும் அய்யன் திருவள்ளுவர் குறித்து தெரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் கடலுக்கு நடுவில் கண்ணாடி இழை தரைத்தளபாலம் வழியாக நடந்து செல்லும் போது மனதில் இனம்புரியாத பயம் கலந்த பரவசம் ஏற்படுவதோடு கடலின் அலைகளை கண்டு ரசித்ததாகவும் இப்படி ஒரு வாய்ப்பளித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.