» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குலசேகரம், திற்பரப்பு பகுதிகளில் ரூ.41.33 கோடி வளர்ச்சி திட்டப்பணிகள் : ஆட்சியர் ஆய்வு
சனி 7, செப்டம்பர் 2024 11:05:58 AM (IST)
குலசேகரம் மற்றும் திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.41.33 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட குலசேகரம் மற்றும் திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு தேர்வுநிலை பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.20.21 கோடி மதிப்பீட்டில் காமூர் பகுதியில் 1.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் அப்பகுதியில் 750 குடும்பங்கள் உள்ளன. இத்திட்டத்தின் மூலம் காமூர், கையாலக்கல், மாஞ்சகோணம் பொற்றை மற்றும் சேக்கல் பகுதியில் உள்ள மக்கள் சுமார் 2,800 பேர் பயன்பெறுவார்கள்.
குலசேகரம் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.21.13 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்படி திட்டத்தில் 3 மேல்நிலை நீர்தேக்கதொட்டிகள், ஒரு தரைமட்ட தொட்டி, இரண்டு உறிஞ்சி கிணறுகள், 4,900 மீட்டர் முதன்மை நீரேற்ற குழாய் மற்றும் 55,204 மீட்டர் விநியோக குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் முடிவடையும் போது 15,140 பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
அதன்படி, ஜியோ கார்டன் பகுதியில் 1.00 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் 1.00 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தரைமட்டத்தொட்டி கட்டுமான பணிகள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்ததார்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.
ஆய்வுகளில் பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் புஷ்பலதா, செயல் அலுவலர்கள் எட்வின் ஜோஸ் (குலசேகரம்), விஜயகுமார் (திற்பரப்பு), இளநிலை பொறியாளர்கள் தங்கபாய் (குலசேகரம்), என்.கே.சதீஷ்குமார் (திற்பரப்பு), பணி மேற்பார்வையாளர் ஹரிகுமார், துறை அலுவலர்கள் கலந்து பலர் கலந்து கொண்டார்கள்.