» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை: மத்திய அரசு அரசாணை

செவ்வாய் 6, மே 2025 4:05:49 PM (IST)

நாடு முழுவதும் நிகழும் சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு இனி இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுதும் கடந்த, 2023ம் ஆண்டு, 4.80 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 1.72 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

விபத்துகளின் போது உரிய நேரத்தில் முறையான சிகிச்சை கிடைக்காததால், உயிரிழப்புகள் அதிகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, சாலை விபத்தில் காயம் அடைந்தோருக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம் சோதனை முறையில் சண்டிகரில் மட்டும் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஆறு மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், இலவச மருத்துவ திட்டத்தை நாடு முழுதும் விரிவுபடுத்துவதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சாலை விபத்துகளில் காயம் அடைவோருக்கான இலவச சிகிச்சை திட்டம், 2025, மே 5 முதல் நாடு முழுதும் அமலுக்கு வந்தது.

மோட்டார் வாகனங்களில் செல்லும்போது விபத்தில் சிக்கி காயம் அடையும் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சைக்கான தகுதி பெறுவர். போலீஸ், மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதார அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், தேசிய சுகாதார ஆணையம் இத்திட்டத்தை செயல்படுத்தும்.

விபத்து நடந்த நாளில் இருந்து முதல் ஏழு நாட்களுக்கு, 1.50 லட்சம் ரூபாய் வரையில் இத்திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே இந்த இலவச சிகிச்சை அளிக்கப்படும். பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் முதலுதவிக்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைக்கு மாற்றப்படுவர்.

இத்திட்டம் செயல்படுவதை கண்காணிக்க மத்திய சாலை போக்குவரத்து துறை செயலர் தலைமையில், 11 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory