» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவெக - பாஜக இடையே இணக்கம்: ஆளுநர் உரை மீது உதயநிதி ஸ்டாலின் சந்தேகம்!

வியாழன் 18, ஜூன் 2026 5:13:24 PM (IST)



தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை ஆற்றி முடித்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், புதிய தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு ஏற்பட்டுள்ளதோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஒருமுறை கூட ஆளுநர் முழுமையாக வாசித்தது இல்லை; பல திருத்தங்களைச் செய்துள்ளார். ஆனால், தற்போது தவெக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஓர் எழுத்து, ஒரு வரி, ஒரு புள்ளி அல்லது கமாவைக் கூட மாற்றாமல் அப்படியே ஆளுநர் வாசித்துள்ளார். இதிலிருந்தே இந்த அரசுக்கும், பாஜகவுக்கும் இடையே இணக்கமான ஒரு தொடர்பு அல்லது புரிந்துணர்வு ஏற்பட்டுவிட்டதோ என்ற எண்ணம் அனைவருக்கும் வந்துள்ளது. மேலும், திமுக ஆட்சியில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாகத் தேசிய கீதமும் பாடப்படும். ஆனால், இந்த முறை இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

தற்போதைய ஆளுநர் உரை என்பது ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட் (Content) போல அமைந்துள்ளது. தவெகவின் சுய புராணங்களைத் தவிர்த்துப் பார்த்தால், ஒலிம்பிக் மையங்கள், இருமொழிக் கொள்கை, 69% இடஒதுக்கீடு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி, கீழடி அகழாய்வு என அனைத்தும் கடந்த திமுக அரசின் திட்டங்களும், சாதனைகளும், கோரிக்கைகளுமே ஆகும். கடந்த எங்கள் அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு, காப்பி பேஸ்ட் (Copy-paste) அரசாக இவர்கள் செயல்படுகின்றனர்.

டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளதாக முதல்வர் விஜய் பெருமை பேசியுள்ளார். இது கடந்த 38 நாள் தவெக ஆட்சியின் சாதனையா? எங்கள் ஆட்சியின் சாதனைகளையே அவர் டெல்லியில் வாசித்து வந்துள்ளார். மேலும், 'முதல்வன்' என்று சொன்னாலே மு.க.ஸ்டாலின் பெயர்தான் நினைவுக்கு வரும் என்பதால், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை இந்த அரசு மாற்றியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. குற்றங்களில் ஆளும் கட்சியினரே ஈடுபடுகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து வீர வசனம் பேசிய தற்போதைய முதல்வர், இன்று 'கண்ணாடியைப் பார்த்துப் பேசுகிறார்' என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இல்லை.

தமிழகத்தில் இவ்வளவு பிரச்சினைகள் நடந்தாலும், முதல்வர் கோட் சூட் போட்டுள்ளார், டிபன் பாக்ஸில் லஞ்ச் சாப்பிடுகிறார் என அவரது கட்சியினர் ட்ரெண்ட் செய்கிறார்கள். எனவே, உண்மையான பிரச்சினைகள் பற்றி முதல்வர் வாயைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தவே திமுக உறுப்பினர்கள் அனைவரும் ‘தயவு செய்து வாயைத் திறங்க சிஎம் சார்’ என்ற பேட்ஜ் அணிந்து இன்று வந்துள்ளோம். மாற்றம் என்று சொல்லிவிட்டு, 'இது மாற்றம் அல்ல, மாட்டிக்கிட்டோம்' என்று மக்கள் சொல்லும் நிலையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது என உதயநிதி ஸ்டாலின் வன்மையாகக் கண்டித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory