» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக ஆட்சிக்கால அனுமதி: ரூ.2,000 கோடி திட்ட அனுமதி ரத்து - தவெக அரசு அதிரடி நடவடிக்கை!

வியாழன் 18, ஜூன் 2026 4:19:45 PM (IST)

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்கு அருகில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட ரூ.2,000 கோடி மதிப்பிலான பிரிகேட் மார்கன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியைத் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ரத்து செய்துள்ளது.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதிக்கு மிக அருகில் உயரமான குடியிருப்புகள் மற்றும் 1,250 வீடுகள் கட்டும் 'பிரிகேட் மார்கன்' திட்டத்திற்கு, கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அப்போதைய திமுக அரசால் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்தவொரு கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்றும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) உத்தரவை ரத்து செய்யக் கோரியும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மற்றும் 'அறப்போர் இயக்கம்' சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாகப் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. எனினும், இந்த ஆண்டு பிப்ரவரியில் (2026) சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ததால், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகளுக்கான தடை தற்காலிகமாக நீங்கியிருந்தது.

இந்நிலையில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தற்போது ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. திட்ட முன்மொழிவாளர்கள் (Project Proponents) முறைப்படி தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்திடம் (Wetland Authority) உரிய முன் அனுமதி பெறத் தவறியதே இந்த அதிரடித் தடைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் ஈரநிலங்களைப் பாதுகாக்கும் நோக்கில், விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட ரூ.2,000 கோடி பெருநிறுவனக் கட்டுமானத் திட்டத்தின் அனுமதியைத் தமிழக அரசு அமைப்பின் மூலம் ரத்து செய்திருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory