» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை : 5பேர் சிக்கினர்!

வியாழன் 18, ஜூன் 2026 5:01:28 PM (IST)

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், 5 இடைத்தரகர்கள் சிக்கினர். கணக்கில் வராத ரூ.55,900 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையில் போலீசார் அடங்கிய குழுவினர் இன்று மதியம் தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர். சோதனை தொடங்கப்பட்டவுடன் அலுவலகத்தின் வெளிக்கதவுகள் அனைத்தும் உள்பக்கமாகப் பூட்டப்பட்டன.

அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்களின் செல்போன்களை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்று மதியம் 12:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனையானது மிகவும் ரகசியமாகத் தொடர்ந்தது.

சோதனையின் போது, பொதுமக்களிடம் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுகளுக்கு லஞ்சம் பெற்றுத் தர முயன்றதாக ஜெயராஜ், பெரியசாமி, ஐசக் ஜெபசீலன், பட்டுராஜா மற்றும் சந்திரன் ஆகிய 5 இடைத்தரகர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினர். பிடிபட்ட இந்த 5 நபர்களிடம் இருந்தும் கணக்கில் வராத ரூ.55,900 ரொக்கப் பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பிடிபட்ட இடைத்தரகர்கள் 5 பேரையும் போலீசார் தூத்துக்குடியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் ஐந்து பேரிடமும், இந்த லஞ்சப் பணப் பரிமாற்றத்தில் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடி அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

புரியல?Jun 18, 2026 - 06:12:10 PM | Posted IP 104.2*****

அலுவலகத்ல வேற யாருக்கும் தொடர்பே இருக்காதோ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory