» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடக்கம்!
சனி 21, பிப்ரவரி 2026 10:29:53 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், மாசித் திருவிழா இன்று (பிப்ரவரி 21) அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், உலகப்புகழ் பெற்ற மாசித் திருவிழா இன்று (பிப்ரவரி 21) அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.திருவிழாவின் முதல் நாளான இன்று சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன.
தொடர்ந்து, வெள்ளிப் பல்லக்கில் வைக்கப்பட்ட கொடிப்பட்டமானது ஒன்பது சந்திகள் வழியாகக் கொண்டு வரப்பட்டது. அதிகாலை 5.05 மணிக்கு, திருக்கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக் கொடிமரத்தில் காப்புக்கட்டிய கற்பக வீரக்குமார் பட்டர் வேத மந்திரங்கள் முழங்கக் கொடியினை ஏற்றினார்.
பின்னர் கொடிமரத்திற்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, காலை 6.35 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலையில் அப்பர் சுவாமிகள் தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீ பெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் தந்தப் பல்லக்கில் ஒன்பது சந்திகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. முன்னதாக, கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொடிப்பட்ட வீதி உலா நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் பிப்ரவரி 25-ஆம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு, மேலக்கோயிலில் (சிவன் கோயில்) இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ஆம் தேதி ஏழாம் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு சண்முகப் பெருமானின் உருகு சட்டசேவையும், காலை 9 மணிக்கு ஆறுமுகப் பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்தடையும் நிகழ்வும் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி சிவன் அம்சத்தில் தங்கச் சப்பரத்தின் மீது சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.
தொடர்ந்து எட்டாம் திருவிழாவான பிப்ரவரி 28-ஆம் தேதி காலை 5 மணிக்கு சுவாமி பிரம்மா அம்சத்தில் பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், காலை 10.30 மணிக்கு விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதியுலா வருகிறார். மார்ச் 1-ஆம் தேதி ஒன்பதாம் திருவிழா அன்று இரவு சுவாமி தங்கக் கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தேரோட்டம் மார்ச் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மார்ச் 3-ஆம் தேதி இரவு தெப்ப உற்சவமும், மார்ச் 4-ஆம் தேதி 12-ஆம் திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான பாதுகாப்புப் பணிகளில் கோயில் காவல் நிலைய ஆய்வாளர் கனகராஜன் தலைமையிலான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளைத் தக்கார் ரா. அருள்முருகன், இணை ஆணையர் க. ராமு மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி அறவழி உண்ணாநிலை போராட்டம்
சனி 21, பிப்ரவரி 2026 3:19:10 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன பூங்கா அமைய ஆய்வு: கவுன்சிலர் கோரிக்கை ஏற்பு
சனி 21, பிப்ரவரி 2026 3:16:23 PM (IST)

ஏப்ரலில் தேர்தல்? பிப். 25 முதல் 27 வரை தேர்தல் ஆணையக் குழு புதுச்சேரி, தமிழகத்தில் ஆய்வு
சனி 21, பிப்ரவரி 2026 10:20:59 AM (IST)

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடியும்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:51:36 PM (IST)

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 3:53:08 PM (IST)

