» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் ரத்து எதிரொலி - தேர்தல் அலுவலகம் மூடல்!

சனி 6, செப்டம்பர் 2025 4:19:06 PM (IST)



தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாசரேத்தில் செயல்பட்டு வந்த திருமண்டல தேர்தல் அலுவலகம் பூட்டப்பட்டது‌. 

தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து திருமண்டல தேர்தலை நடத்தவும், அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதி பதி ஜோதிமணி நியமிக்கப்பட்டு கடந்த ஜுன் மாதம் 26ம் தேதி தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். 

தேர்தல் அதிகாரிகளாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜாண் சந்தோஷம், ரத்தினராஜ் மற்றும் வக்கீல் பிரபாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதற்காக தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் அலுவலகம் நாசரேத் ஆர்ட் தொழிற் பள்ளி விருந்தினர் மாளிகையில் ஜுலை 21 ந் தேதி முதல் செயல்பட்டு வந்தது.

முதற்கட்டமாக வருகிற செப்டம்பர் 7ந் தேதி ஞாயிற்றுக்கிழமை திருமண்டல பெருமன்ற மற்றும் சேகரமன்ற சபை பிரதிநிதிகள் தேர்தல் அனைத்து ஆலயங்களிலும் பிரதான ஆராதனையைத் தொடர்ந்து நடைபெறுவதாக அட்டவணையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல், வேட்பு மனுத் தாக்கல், வாக்கு சேகரிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் செப்டம்பர் முதல் சி.எஸ்.ஐ. பிரதம பேராயர் கே. ரூபன் மார்க் ஆணையின் படி, தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் பொறுப்பு பேராயராக ஆந்திரா ராயலசீமா திருமண்டல பேராயர் ஐசக் வரபிரசாத் புதிதாக பொறுப்பேற்றார். 

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சி,எஸ்.ஐ‌. மாடரேட்டர் ரூபன் மார்க் உத்தரவின் பேரில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் 07.09.2025 முதல் தொடங்கி நடத்தப்படும் தேர்தல்கள் அனைத்தும் அடுத்த நடவடிக்கை வழிகாட்டுதல் வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக திருமண்டல பொறுப்பு பேராயர் ஐசக் வரபிரசாத் அறிவிப்பு வெளியிட்டார் .

இந்நிலையில் நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி விருந்தினர் மாளிகையில் செயல்பட்டு வந்த தேர்தல் அலுவலகம் பூட்டப்பட்டது. மேலும் சி.எஸ்.ஐ. சினாடு பேரவை சார்பில் இத் தேர்தலை நடத்துவதற்கு நிர்வாகக் குழுவினர் நியமனம் செய்யப்பட்ட பின்னர் புதிதாக மீண்டும் தேர்தல் நடவடிக்கைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory