» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமெரிக்காவின் வரியால் இந்திய ஏற்றுமதிக்கு மிகப்பெரிய அபாயம்: துரை வைகோ பேட்டி!

சனி 30, ஆகஸ்ட் 2025 11:08:43 AM (IST)



அமெரிக்காவின் 50 சதவீதம் வரிவிதிப்பால் இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்குரிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோவில்பட்டியில் துரை வைகோ எம்.பி. கூறினார்.

ம.தி.மு.க. தென் மண்டல மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. கலந்து கொண்டு பேசினார். கூட்டத்துக்கு பின்னர் துரை வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் எனக்கூறி சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்காமல் ஒரு அரசியல் கட்சியை போல் நடக்கிறது. சட்டப்பிரிவு 130-ன் படி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பின்னர் ஒருவரின் பதவியை பறிப்பதில் ஆட்சேபனை கிடையாது. 

ஆனால் கோர்ட்டு தீர்ப்புக்கு முன்னரே 30 நாட்கள் சிறையில் இருக்கும்போது அவரது பதவியை பறிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஒரு மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவோ, கவர்னர் ஆட்சி அமல்படுத்துவதற்காக, ஒரு மாநிலத்தின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்வதற்காகவோ இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது.

இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு அமெரிக்க நாடு 50 சதவீதம் வரிவிதிப்பால் மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பொறுத்த வரை ஜவுளித்துறை முக்கிய தொழிலாக உள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பால் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலை இழக்கும் நிலை வரும். மத்திய அரசு இதற்குரிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 

ஏற்கெனவே மத்திய அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிகிறது. 200 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. இதில் 40 நாடுகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. அந்த நாடுகளுடன் பேசி அமெரிக்க மூலமாக ஏற்படும் வர்த்தக இழப்பை ஈடு செய்யும் அளவுக்கு ஏற்றுமதியை கொண்டு சென்றால் இப்பிரச்சினையை சரி செய்யலாம் என்ற முயற்சி இருக்கிறது. இதனை விரைந்து செய்ய வேண்டும்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியதை தவிர்க்கவேண்டும். பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளையொட்டி திருச்சியில் ம.தி.மு.க. சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், நெல்லை மாவட்ட செயலாளர்கள் கே.எம்.ஏ.நிஜாம், உவரி ரெய்மண்ட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory