» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காதலன் கண்முன்னே இளம்பெண் தற்கொலை: விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:34:40 AM (IST)

சென்னையில் காதலன் கண்முன்னே மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்த விவகாரத்தில் போலீஸ் விசாரணையில் பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. 

சென்னை ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவேந்தரின் மகள் ஹர்ஷிதா (23). இவர், வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தர்ஷன் (26) என்ற வாலிபரை காதலித்தார். இருவரும் பட்டதாரிகள். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இணையதளம் வாயிலாக முளைத்த காதல் செல்போன் வாயிலாக வளர்ந்தது.

ஆரம்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு இருந்த போதிலும் கடந்த பிப்ரவரி மாதம் இருதரப்பு பெற்றோர்களும் பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நவம்பர் மாதம் திருமணத்தை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தினமும் இருவரும் செல்போனில் பேசிக் கொண்டதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணத்துக்கு தடை ஏற்பட்டது.

இளம்பெண் ஹர்சிதா திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாக தெரிகிறது. தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று முக்கியமான நிபந்தனை விதித்துள்ளார். இதற்கு தர்ஷன் முடியாது என்று தெரிவித்ததாக தெரிகிறது. இதையொட்டி காதல் ஜோடியிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஹர்ஷிதா கடந்த சனிக்கிழமை இரவு காதலன் தர்ஷனை அவரது வேப்பேரி வீட்டில் சந்தித்துள்ளார். உறவினர்கள் முன்னிலையில் இருவரும் சமாதானமாக பேசி உள்ளனர். ஆனால் ஹர்ஷிதா நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. தர்ஷனும் அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார். இந்த நிலையில்தான, ஹர்ஷிதா திடீரென்று மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வேப்பேரி உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் ராஜூ ஆகியோர் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினார்கள். தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் தர்ஷன் கொடுத்த வாக்குமூலம் வெளியாகி உள்ளது. 

அதன் விவரம் வருமாறு: எங்கள் குடும்பம் கவுரவமானது. அப்பா தொழில் அதிபர். அண்ணன் ஆடிட்டராக உள்ளார். ஹர்ஷிதா மாற்றுத்திறனாளியாக இருந்தபோதும் அவரோடு உள்ள காதல் உண்மையானது. அதனால்தான் எனது பெற்றோரிடம் பேசி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தேன். நிச்சயதார்த்தத்துக்கு பிறகு ஹர்ஷிதாவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது.

நாங்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் திருமணத்துக்கு பின்னர் தனிக்குடித்தனம் போகவேண்டும் என்றும், எனது பெற்றோரிடம் பேசக்கூடாது என்றும் ஹர்ஷிதா நிபந்தனை விதித்தார். நான் கிழித்த கோட்டை தாண்டக்கூடாது என்றார். அவரை பற்றி புகழ்ந்து வாட்ஸ் அப்பில் 1,000 வார்த்தைகளை பதிவிட வேண்டும் என்றார். அவருடைய அனுமதி இல்லாமல் செல்போனில் கூட யாரிடமும் நான் பேசக்கூடாது என்றார்.

ஏற்கனவே அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடைசியில் நின்று போய் உள்ளது. ஹர்ஷிதாவின் செயல்கள்தான் அதற்கு காரணமாக இருந்துள்ளது. இந்த சம்பவத்தை என்னிடம் மறைத்துவிட்டார்கள்.

ஹர்ஷிதா, எதற்க்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுவார். சமீபத்தில் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீட்டை விட்டு சென்றுவிட்டார். அவரது தாயார் என்னை உதவிக்கு அழைத்தார். நான் சமாதானம் பேசி ஹர்ஷிதாவின் தற்கொலை முயற்சியை தடுத்து காப்பாற்றினேன். தற்கொலை மனப்பான்மையுடன் அவர் செயல்பட்டது எனக்கு அச்சத்தை உண்டாக்கியது.

இதுகுறித்து அவரது பெற்றோரிடமும் பேசினோம். திருமணத்தை நிறுத்துவது என்று இருதரப்பிலும் பேசி முடிவெடுக்கப்பட்டது. இதுபற்றி பேசுவதற்காகவே ஹர்ஷிதா எங்கள் வீட்டுக்கு வந்தார். ஆனால் பேசிக்கொண்டிருந்த போதே மாடிக்கு ஓடினார். நானும் அவரை பின்தொடர்ந்து துப்பட்டாவை பிடித்து இழுத்து காப்பாற்ற முயற்சித்தேன். இது அவரது உறவினர்களுக்கும் தெரியும். ஆனால் என்னால் அவரை காப்பாற்ற முடியவில்லை. எங்கள் குடும்பத்தை பிடிக்காத சிலர் போலீசாரிடம் என்னை பற்றி தவறாக தகவல் கொடுத்துவிட்டனர்.

ஹர்ஷிதாவின் சாவுக்கு நான் காரணம் இல்லை. இது அவரது பெற்றோருக்கே நன்கு தெரியும். எனவே இறுதியில் உண்மை வெல்லும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் ஹர்ஷிதா தற்கொலை செய்ய மாடிக்கு ஓடியதும், அவரை காப்பாற்ற தர்ஷன் பின்தொடர்ந்து ஓடுவதும், துப்பட்டாவை பிடித்து இழுப்பதும் போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. தர்ஷனின் குடும்பத்துக்கு எதிரான நபர்கள் அவரது அண்ணன் புகைப்படத்தையும் இணையதளத்தில் தவறாக வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory