» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆம்புலன்ஸ் வாகனம், ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 3:47:51 PM (IST)
ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் அவர் பிரசாரம் செய்தபோதும், திடீரென அங்கு ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. இதனால் கோபமடைந்த அவர், தி.மு.க. அரசு வேண்டும் என்றே அ.தி.மு.க.வின் ஒவ்வொரு கூட்டத்திலும் நோயாளி இல்லாத ஆம்புலன்சை விட்டு இடையூறு ஏற்படுத்தி கூட்டத்தை சீர்குலைக்க திட்டமிட்டு சதி செய்கிறது. கூட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்று கேட்டதோடு, இது தொடர்பாக எச்சரிக்கையும் விடுத்தார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று இரவு அவர் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அப்பகுதியில் உள்ள முசிறி சாலையில் இருந்து பாலக்கரை பெருமாள் மலை அடிவாரம் மற்றும் புறவழிச்சாலை முழுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்தார்கள். துறையூரின் மையப்பகுதியான அண்ணா பஸ் நிலையம் முன்பும், திருச்சி-துறையூர் சாலையிலும் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்காக திட்டமிடப்பட்டு, அங்கு மேடை அமைக்கப்பட்டிருந்தது.
அங்கு ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்திருந்த நிலையில் திடீரென்று 108 ஆம்புலன்ஸ் ஒன்று அந்த வழியாக வந்தது. இதைக்கண்ட தொண்டர்கள் அந்த வாகனத்தை மறித்தனர். மேலும் கையால் தட்டி பின்பக்க கதவை திறந்து நோயாளிகள் யாரேனும் உள்ளனரா? என்று பார்த்தனர். ஆனால் நோயாளி இல்லாததால், ஆம்புலன்சை முற்றுகையிட்டு டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வேறு திசையில் செல்லும்படி அறிவுறுத்தினர்.
ஆத்தூர் சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அந்த வழியாக சென்றதாக டிரைவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த ஆம்புலன்ஸ் வேறு வழியில் திருப்பி விடப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை எச்சரித்துள்ளது. தனி நபரோ (அ) கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை என்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்குவோர் மீது ஜாமீனில் வெளியே வராத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்லும்போது சைரன் சப்தத்துடனே செல்லும்; அதனால் வெறும் ஆம்புலன்ஸ் செல்கின்றது என்று நினைக்க வேண்டாம். அழைப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு முறையான விசாரணைக்குப் பிறகே ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்கின்றது. 108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
தாக்கும் நபர்கள் மீது மருத்துவ பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கினால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்த பதாகைகளை 108 ஆம்புலன்ஸ் கதவுகளில் வலது புறத்தில் ஒட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டின் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு: பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:48:44 PM (IST)

தூத்துக்குடியில் 2 வீடுகளில் 31 பவுன் நகை கொள்ளை : போலீசார் விசாரணை!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:22:25 PM (IST)

தூத்துக்குடியில் வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயர்வு: மீனவர்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 9:28:03 AM (IST)

விஜயை நேரில் பார்த்தால் முகத்தில் ஓங்கி குத்துவேன்: நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:28:44 PM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: 5476 நபர்களுக்கு உடல் பரிசோதனை!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:13:39 PM (IST)

ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்க புதிய கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:00:42 PM (IST)
