» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெரும் பதவியின் கண்ணியத்தைக் குறைப்பதா? அமித்ஷாவுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்!

திங்கள் 25, ஆகஸ்ட் 2025 11:27:42 AM (IST)

தான் வகிக்கும் பெரும் பதவியின் பொறுப்பை எண்ணிப் பாராமல் மாற்றுக் கட்சி வேட்பாளரை மிகக் கடுமையான சொற்களால் தாக்கியிருக்கும் உள்துறை அமைச்சருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய அரசில் அரசியல் சட்டப்படி மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் மாற்றுக் கட்சித் தலைவர்களைப் பற்றி குறிப்பிடும்போது கண்ணியக் குறைவாகவும், நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாகவும், தடித்த வார்த்தைகளால் குறிப்பிடுவது மிகவும் வருந்தத்தக்கது. இந்தப் போக்கினை அவர்கள் திருத்திக்கொள்ளவேண்டும்.

பிரிட்டனின் நாடாளுமன்ற மரபுகளை நாம் முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறோம். அதன்படி மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் குறிப்பிடும்போது அவர்களின் பெயர்களையே கூறக் கூடாது. மாறாக, இந்தத் தொகுதியைச் சேர்ந்த உறுப்பினர் என்று மட்டுமே கூறவேண்டும். பெயரைக் குறிப்பிடுவது நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானதாகும்.

இந்திய அரசில் உள்துறை அமைச்சராகப் பெரும் பொறுப்பு வகிக்கும் அமித் சா அவர்கள், அண்மையில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், தற்போது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி குறித்துக் குறிப்பிடும்போது, நக்சல் இயக்கத்தின் ஆதரவாளர், அதற்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியவர் என்னும் கடுமையான குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார்.

தான் வகிக்கும் பெரும் பதவியின் பொறுப்பை எண்ணிப் பாராமல் மாற்றுக் கட்சி வேட்பாளரை மிகக் கடுமையான சொற்களால் தாக்கியிருக்கும் உள்துறை அமைச்சரின் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். உச்சநீதிமன்ற நீதிபதியையோ அவரது தீர்ப்பையோ விமர்சனம் செய்வது நீதிமன்ற அவமதிப்பாகும். மேலும், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மாற்று அணியின் வேட்பாளராகப் போட்டியிடும் ஒருவர் மீது தக்க ஆதாரம் எதுவுமின்றி கடுமையான குற்றச்சாட்டை அள்ளிவீசுவது பொறுப்பற்ற போக்காகும். உள்துறை அமைச்சர் பதவியின் கண்ணியத்தைச் சீரழிப்பதாகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory