» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் : ஆட்சியர் தகவல்

செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 11:27:09 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக.9 முதல் அக்.11ம் தேதி வரை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் 02.08.2025 அன்று "நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்” திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். இந்த திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான பேர் பயனடையும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைகளில் வட்டாரத்திற்கு 3 முகாம் மற்றும் மாநகராட்சிக்கு 3 முகாம் என தமிழ்நாட்டில் மொத்தம் 1256 ”நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமானது 09.08.2025 அன்று கல்லிடைக்குறிச்சி திலகர் வித்தியாலயா மேல்நிலைப்பள்ளியிலும், 23.08.2025 அன்று களக்காடு நேஷனல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், 30.08.2025 அன்று பாளையங்கோட்டை புனித யோவான் மேல்நிலைப்பள்ளியிலும், 06.09.2025 அன்று வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 13.09.2025 அன்று விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபுள்யூ.ஏ மேல்நிலைப்பள்ளியிலும், 20.09.2025 அன்று தேவர்குளம் சங்கரி மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், 27.09.2025 அன்று முக்கூடல் எஸ்.எஸ்.கே.வி சாலா ஆரம்பப்பள்ளியிலும், 04.10.2025 அன்று முன்னீர்பள்ளம் மேல்நிலைப்பள்ளியிலும், 11.10.2025 அன்று மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் அடிப்படை சிகிச்சை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் பரிசோதனைகளும் (உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மின் இதய வரைபடம், எக்கோ, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் முழுமையான இரத்தப்பரிசோதனை, காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறிதல் பரிசோதனைகளும், ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் போன்ற அனைத்து பரிசோதனைகளும் கண்டறியப்படும்). மேலும், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, இதயவியல், மகப்பேறு மருத்துவம் எலும்பு மற்றும் நரம்பியல், மனநலம், நுரையீரல், தோல் நோய், காது மூக்கு தொண்டை மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் இயன்முறை சிகிச்சை ஆகிய சிறப்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

மேற்கண்ட பரிசோதனைகள் மட்டுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத்திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் போன்ற சேவைகள் இம்முகாமில் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரமும் ”சரியாக உண்ணுங்கள்” இயக்கம் மூலம் அறிவுரைகள் வழங்கப்படும்.

மேலும் 30 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மன நல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory