» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காரைக்குடியில் 'வளர் தமிழ்' நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
செவ்வாய் 21, ஜனவரி 2025 4:16:46 PM (IST)
காரைக்குடியில் 'வளர் தமிழ்' நூலகம் மற்றும் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை தெரிந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் இன்று கள ஆய்வு செய்கிறார். இந்த நிலையில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களின் நிதி பங்களிப்பில் 5 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். மேலும், கலையரங்க வளாகத்தில் அமைக்கப்பட்ட 'வளர் தமிழ்' நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த நிதி ரூ.12 கோடியில் நூலகம் கட்டப்பட்டுள்ளது.
விழாவில், ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். மாங்குடி, டாக்டர் வி. முத்துராஜா, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிப்பேரரசு வைரமுத்து, சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் க. ரவி மற்றும் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.