» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் கலசங்கள் பொருத்தும் பணி தொடங்கியது: மூலவருக்கு சிறப்பு பூஜை
செவ்வாய் 21, ஜனவரி 2025 8:51:42 AM (IST)
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ராஜகோபுரத்தில் கலசங்கள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. மேலும் மூலவர், சண்முகர் விமானங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடியிலும், இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடியிலும் என மொத்தம் ரூ.300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஜூலை 7-ந் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் கும்பாபிஷேக விழா திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ந் தேதி ராஜகோபுரத்திற்கு பாலாலயம் நடைபெற்று திருப்பணிகள் நடந்து வருகின்றன. நேற்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, வல்லப விநாயகர், நடராஜர், பெருமாள் உள்ளிட்ட 17 சுவாமிகளின் விமானங்களுக்கு பாலாலயம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.
பின்னர் விமான பிம்ப கடாகர்சனம், ஹோமம் நடந்தது. காலை 6.15 மணிக்கு விமான பாலாலய கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அத்தி மரத்திலான சித்ர பிம்பத்திற்கு கலச அபிஷேகம் நடந்தது. திருவனந்தபுரம், முட்டவிலா மடம், பிரம்மஸ்ரீ சுப்பிரமணியரு தந்திரி தலைமையில் தாந்திரீக முறைப்படி மூலவர் விமானத்திற்கு ஆவாஹனம் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஆவாஹனம் செய்யப்பட்ட கும்ப நீரானது மகா மண்டபத்திற்கு மேளதாளம் முழங்க கொண்டு வரப்பட்டு மூலவர் பாதத்திற்கு ஊற்றப்பட்டது. மூலவர், வள்ளி, தெய்வானைக்கு போத்திமார்களும், சண்முகர், நடராஜருக்கு சிவாச்சாரியார்களும், பெருமாளுக்கு பட்டாச்சாரியார்களும், வல்லப விநாயகருக்கு விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர் தலைமையில் திரிசுதந்திரர்களும் பூஜை செய்தனர்.
நிகழ்ச்சியில், அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அன்புமணி, கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், ஹெச்.சி.எல். நிறுவன நிர்வாக உதவி தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், கும்பாபிஷேக திருப்பணிகளில் ஒரு பகுதியாக 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்காக ராஜகோபுரத்தின் மேலே உள்ள 9 கலசங்கள் ஆகம விதிப்படி பூஜை செய்யப்பட்டு தனியாக பிரித்து கழற்றி கீழே கொண்டுவரப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடந்தது. தற்போது அந்த பணிகள் முடிந்து அவற்றில் வரகுகள் நிரப்பி கலசங்களை ராஜகோபுரத்தின் மேல் தளத்திற்கு கொண்டு சென்று பொருத்தும் பணிகள் நேற்று தொடங்கியது. இந்த பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவடையும் என கூறப்படுகிறது. முன்னதாக ராஜகோபுர வாசலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.