» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி : தவெக நிர்வாகி மீது பரபரப்பு புகார்!
வியாழன் 25, ஜூன் 2026 12:42:04 PM (IST)
சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி விளாத்திகுளம் இளைஞரிடம் 6 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுத்து, பணத்தைப் பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட பெற்றோர் திருச்சி காவல் ஆணையரிடம் முறையிட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நூத்தலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சோலைரெட்டி. இவருடைய மகன் ஹெமேஸ், மின் பட்டயப் படிப்பு (DEEE) முடித்துள்ளார். இவர் யூடியூபில் வந்த விளம்பரம் ஒன்றை நம்பி, திருச்சி தில்லைநகர் பகுதியில் செயல்பட்டு வரும் 'சிம்போனிக் ஜாப் கன்சல்டன்சி' என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்த நிறுவனத்தை நடத்தி வரும் தமிழக வெற்றி கழக நிர்வாகியான சிம்பு என்கிற தமிழ்ச்செல்வனிடம் தனக்கு வெளிநாட்டில் வேலை வேண்டும் என்று கோரியுள்ளார்.அதற்குத் தமிழ்ச்செல்வன், சிங்கப்பூரில் மாதம் 1,400 சிங்கப்பூர் டாலர் சம்பளத்தில் மின் துறை சார்ந்த வேலை இருப்பதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய ஹெமேஸ் குடும்பத்தினர், கூகுள் பே மூலமாகவும், கையில் ரொக்கமாகவும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 7 லட்சத்து 500 ரூபாய் வரை தமிழ்ச்செல்வனிடம் செலுத்தியுள்ளனர்.
பணம் பெற்றுக் கொண்ட தமிழ்ச்செல்வன், கடந்த நவம்பர் மாதம் ஹெமேஸை சிங்கப்பூருக்கு அனுப்பியுள்ளார். ஆனால், அங்குச் சென்ற பின்னர் தமிழ்ச்செல்வன் கூறிய வேலை வழங்கப்படவில்லை. மேலும், அங்குள்ள நிறுவனம் தங்களிடம் போதிய வேலையும் சம்பளமும் இல்லை எனக் கூறி ஹெமேஸை ஊருக்குத் திரும்பிச் செல்லுமாறு வற்புறுத்தியுள்ளது. இது குறித்து ஹெமேஸ் மொபைல் மூலம் தமிழ்ச்செல்வனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஊருக்கு வந்தால் மீதமுள்ள பணத்தைத் தருவதாகக் கூறியுள்ளார்.
ஆனால், தந்தை சோலைரெட்டி தனது ஒரே வீட்டுப் பத்திரத்தைத் தனியார் நிறுவனத்தில் அடமானம் வைத்துப் பணம் திரட்டித் தன்னை அனுப்பியதால், வறுமை காரணமாக ஹெமேஸ் ஊருக்குத் திரும்பாமல் சிங்கப்பூரிலேயே குறைந்த சம்பளத்தில் ஒரு மாற்று வேலையில் தங்கிப் பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள சோலைரெட்டி தமிழ்ச்செல்வனிடம் சென்று, ஒப்பந்தப்படி வேலை இல்லாததால் ஏஜென்சி கட்டணம் போக மீதிப் பணத்தைத் தருமாறு கேட்டுள்ளார். அதற்குத் தமிழ்ச்செல்வன், பணத்தைத் திருப்பித் தர முடியாது என்றும், மீறிப் புகார் அளித்தால் காவல் துறையினருக்கு லஞ்சம் கொடுத்துப் பிரச்சினையைச் சரி செய்துவிடுவேன் என்றும் கூறி ஆபாசமாகத் திட்டி மிரட்டியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சோலைரெட்டி, திருச்சி மாநகரக் காவல் ஆணையருக்குத் தபால் மூலம் புகார் அனுப்பியுள்ளார். ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கை இல்லாததால், நேரடியாகத் திருச்சி ஆணையர் அலுவலகம் சென்ற அவரை அங்கிருந்த காவலர்கள் தில்லைநகர் காவல் நிலையத்திற்கு அலைக்கழித்துள்ளனர்.
இறுதியில் தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தியபோது, "திருச்சியில் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் எந்த ஏஜென்சியும் முறையாக உரிமம் பெறவில்லை, பின் ஏன் அவர்களிடம் பணம் கொடுத்தீர்கள்?" என்று காவல் நிலையத்திற்குள்ளேயே போலீசார் பேசும் வீடியோ தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமான வீட்டை மீட்க முடியாமல் தவித்து வருவதால், தமிழக அரசு தலையிட்டுத் தவெக நிர்வாகி தமிழ்ச்செல்வன் மீது உரிய நடவடிக்கை எடுத்துத் தங்களது பணத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தியாகம், மனிதநேயத்தை நினைவூட்டும் மொஹரம் : இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்பி வாழ்த்து
வியாழன் 25, ஜூன் 2026 3:49:43 PM (IST)

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: ஆட்சியர் ஆய்வு!
புதன் 24, ஜூன் 2026 5:18:13 PM (IST)

திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி: இளம்பெண் கைது!
புதன் 24, ஜூன் 2026 10:44:57 AM (IST)

தேசிய ஐஸ் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம்: கன்னியாகுமரி மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:15:28 PM (IST)

அகஸ்தீஸ்வரத்தில் மின்சார ரயில் இன்ஜின் பராமரிப்பு தொழிற்கூடம் அமைக்க கோரிக்கை!
செவ்வாய் 23, ஜூன் 2026 3:33:50 PM (IST)

மாற்றுத்திறனாளிகளிடம் கனிவுடன் நடக்க வேண்டும் : ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 22, ஜூன் 2026 8:11:57 PM (IST)



IndianJun 25, 2026 - 03:08:52 PM | Posted IP 162.1*****