» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்: தோவாளையில் சிறப்பு பிங்க் கிராம சபை கூட்டம்!

சனி 20, ஜூன் 2026 5:47:51 PM (IST)



குமரி மாவட்டம் மாதவலாயத்தில் 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற கருப்பொருளில் பிங்க் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 

கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில் 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற உன்னதக் கருப்பொருளினை மையமாகக் கொண்டு, தோவாளை ஊராட்சி ஒன்றியம் மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று பெண்களுக்கான சிறப்பு "பிங்க் கிராம சபை கூட்டம்" நடைபெற்றது. இச்சிறப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கலந்துகொண்டு தாய்மார்கள் மற்றும் பெண் குழந்தைகளிடையே எழுச்சியுரையாற்றினார்.

ஆட்சியர் பிரதாப் தனது உரையில் குறிப்பிட்ட விபரங்கள்: "ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் கிராமப்புற பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகக் கிராம சபை நடத்துவது வழக்கம். ஆனால் பெண்களுக்காக மட்டுமே தனியாகச் சிறப்பு கிராம சபை நடத்துவது தமிழ்நாட்டில் மட்டும்தான் என்பது பெருமைக்குரியது. 

உலகிலேயே முதன்முதலில் மக்களாட்சி முறையில் தேர்தல் நடந்ததற்கான சான்றுகள் காஞ்சிபுரம் மாவட்ட உத்திரமேரூர் கல்வெட்டுகளில் உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது நாட்டின் பலம். தற்போது நாட்டின் கல்வி அறிவு விகிதம் 80 சதவீதத்தை எட்டியுள்ளது. பள்ளி, கல்லூரிப் போட்டித் தேர்வுகளில் மாணவிகளே அதிகளவில் சாதித்து வருகின்றனர். 

விண்வெளித் திட்டங்கள், மாவட்ட ஆட்சியர்கள் எனப் பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் தலைமைப் பொறுப்புக்கு வந்து சாதித்து வருகின்றனர். பெண்கள் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் மறந்து உத்வேகத்துடன் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டும்" என்றார்.

"கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோவாளை பகுதியில் 950 ஆக இருந்த பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம், தற்போது 990-ஐக் கடந்து, 1000-க்கு நெருக்கமாக உயர்ந்துள்ளது சாதனைக்குரியது. இதற்கு உழைத்த சமூகநலத்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் சுயஉதவிக் குழுவினருக்குப் பாராட்டுகள். 

எனினும், நமது அடுத்த இலக்கு 1000 ஆண்களுக்கு 1200 பெண்கள் என்ற நிலையை அடைவதாக இருக்க வேண்டும். மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளிலும் பிறப்பு விகிதத்தை உயர்த்த அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" எனச் சுட்டிக்காட்டினார்.

"பாதுகாப்பற்ற உணர்வு காரணமாகவே 50 சதவீத குழந்தை திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இதனால் கல்வி பாதிக்கப்படுவதுடன், 16, 17 வயதிலேயே ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அனிமிக் (இரத்த சோகை) நிலைக்கு ஆளாகிறார்கள். இதனால் பிறக்கும் குழந்தைகளும் எடை குறைவாகவும், மூளை வளர்ச்சி குறைபாடுடையதாகவும் பிறக்கின்றன. எனவே, குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்காகத் தமிழ்நாடு அரசு ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’, ‘செல்வமகள் சேமிப்பு நிதி’ போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

மேலும், வரவிருக்கும் மழைக்காலத்தை முன்னிட்டு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் தேக்கி வைத்துள்ள பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியின் பின்புறத் தண்ணீரை அடிக்கடி மாற்ற வேண்டும். தூய்மைக் காவலர்களிடம் குப்பைகளை வழங்காமல் சாலையோரங்களில் வீசுவதைத் தவிர்க்க வேண்டும்" என்றும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து குழந்தைகளுக்குப் பெற்றோர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இச்சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மோனிகா, மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சகிலாபானு, முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், சுகாதார அலுவலர் நமச்சிவாயம், மகளிர் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், இணை இயக்குநர் ரவிக்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory