» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்

செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற 18ஆம் தேதி கருங்கல் பெத்லஹேம் பொறியியல் கல்லூரியில் கல்விக் கடன் மேளா நடைபெற உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் இரண்டாவது கல்விக் கடன் மேளா வருகிற 18.09.2025 அன்று கருங்கல் பெத்லஹேம் பொறியியல் கல்லூரியில் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேற்படி முகாமில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் வங்கிகளும் பங்கேற்கின்றன.

கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக சிறப்புக் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முதலாவது கல்விக் கடன் மேளா கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 10 ம் தேதி அன்று நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக வருகிற 18.09.2025 அன்று கருங்கல் பெத்லஹேம் பொறியியல் கல்லூரியிலும், 25.09.2025 அன்று மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியிலும், 10.10.2025 அன்று சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. மேற்படி கல்விக்கடன் முகாம்களில் மாணவர்கள் கலந்து கொண்டு கல்விக்கடன் விண்ணப்பம் செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. https://pmvidyalakshmi.co.in பி.எம் வித்யாலட்சுமி போர்டல் மூலம் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கவும்.

மேலும் கல்விக் கடன் பெற கல்லூரி சேர்க்கைக்கான சான்று, கல்விக் கட்டண விவரங்கள், 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் பெற்றோர்களுடைய பான் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்தில் கல்விக்கடன் குறித்து விண்ணப்பம் செய்வதில் ஏற்படும் சந்தேகங்களை 9944445202 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory