» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!

திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மைசூர் - திருநெல்வேலி மார்க்கத்தில் 11 வாராந்திர சேவைகளில் சிறப்பு ரயிலை ரயில்வேதுறை அறிவித்துள்ளது. இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று மைசூரிலிருந்து இரவு 20:15 மணிக்கு புறப்பட்டு செவ்வாய் கிழமை காலை 11:30 மணிக்கு திருநெல்வேலி வந்து பின்னர் அதே ரயில் செவ்வாய் கிழமை மாலை 15:40 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை காலை 05:40 மணிக்கு மைசூர் போய் சேருகின்றது. இந்த ரயில் பெங்களூரில் இருந்து திருநெல்வேலி மார்க்கம் பயணம் செய்யும் போது இரவு 22:50 மணிக்கு புறப்பட்டு மறுமார்க்கமாக பெங்களூர்க்கு அதிகாலை 3:00 மணிக்கு செல்லுமாறு இயக்கப்படுகின்றது. இதனால் தென் மாவட்டத்திலிருந்து இந்த ரயிலில் பெங்களூர் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

கடந்த விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை ரயில்வேதுறை அறிவித்து இயக்கியது. அப்போது இந்த ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ரயில்வேதுறை இந்த கோரிக்கையை செவிசாய்க்கவில்லை. தற்போது மீண்டும் திருநெல்வேலியிருந்து மைசூர்க்கு தீபாவளி சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது குமரி மாவட்ட பயணிகள் ஏமாற்றமாக்கியுள்ளது.

எனினும், இந்த ரயில் திருநெல்வேலியில் நிறுத்தப்படுவதற்கு மாறாக, சுமார் 87 கி.மீ தூரம் உள்ள கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்பட்டால், பயணிகளுக்கு மேலும் வசதியாக இருக்கும். கன்னியாகுமரி, இந்தியாவின் முக்கியமான சுற்றுலா மற்றும் புனித தலங்களில் ஒன்றாக இருப்பதால், இப்பகுதியைச் சேர்ந்த பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு மைசூர் செல்வதற்கு இந்த வழித்தடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ரயில் அதிகாலை பெங்களூர் செல்லுமாறு இயக்கப்படுவதால் கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது பெங்களூர்க்கு இயக்கப்பட்டு வரும் தினசரி ரயிலின் காலஅட்டவணை 9:30 மணிக்கு பெங்களூர் செல்லுமாறு இயக்கப்படுவதால் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்வதை குறைத்து வருகின்றனர். இந்த சிறப்பு ரயில் ஏன் திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டு உள்ளது என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகின்றது. இதனால் இந்த மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை வைக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் நாகர்கோவில் - திருநெல்வேலி பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்தில் இருப்பதால் இது போன்ற ரயில்கள் மதுரை கோட்டத்தின் எல்லையான திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே உள்ளது. இதைப்போல் திருவனந்தபுரம் கோட்டம் மும்பையிலிருந்து கொங்கள்பாதையில் இயக்கப்படும் சிறப்பு ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்தியுள்ளது. இரண்டு மார்க்கங்களிலும் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மாவட்டத்தில் பக்கத்து மாவட்டத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதை பார்க்கும் போது கன்னியாகுமரி மாவட்டம் இந்தியாவில் இல்லை அல்லது தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இல்லை போல் உள்ளது. இதை கேள்வி கேட்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் ரயில்வே அதிகாரிகளுக்கு ஆமாம் சாமி போட்டு சிங்கி அடிக்கிறார்கள். இதனால் கன்னியாகுமரி மாவட்டம் ரயில்வே வளர்ச்சியில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் புதிய நடைமேடை கல் பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. இதனால் இந்த ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்குவதற்கு எந்த ஒரு முனையை பிரச்சனையும் இல்லை. இது மட்டுமல்லாமல் சிறிய அளவில் இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்தால் எளிதாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க முடியும். இவ்வாறு கால அட்டவணை மாற்றம் செய்ய முடியாத பட்சத்தில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்கலாம். அதன்படி திருநெல்வேலிக்கு தற்போது வரும் 11:30 மணிக்கு புறப்பட்டால் நாகர்கோவிலுக்கு 12:30 மணிக்கு வந்து விட முடியும். 

இவ்வாறு வந்த ரயில் 14:40 மணிக்கு நாகர்கோவிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி தற்போது மைசூர் புறப்படும் நேரமான 15:40 மணிக்கு சென்றுவிட முடியும். இந்த ரயிலுக்கு நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரியில் எந்த ஒரு பராமரிப்பும் தேவையில்லை. இந்த ரயிலுக்கான பராமரிப்பு மைசூர் ரயில் நிலையத்தில் வைத்து செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

இது மட்டுமல்லாமல் இந்த ரயில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்து அதிக வருவாய் கிடைத்தால் இந்த ரயில் நிரந்தர ரயிலாக இயக்குவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன என்று பயணிகள் நலச்சங்க தலைவர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory