» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீதம் இலக்கை எட்ட வேண்டும் : அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு!

திங்கள் 25, ஆகஸ்ட் 2025 4:44:41 PM (IST)



ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் 100 சதவீதம் இலக்கை எட்ட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி கலையரங்கில் தலைமை ஆசிரியர்களுடனான கலந்தாய்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடி பேசுகையில்- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 

தொடக்கநிலை கல்வியில் மாணவர்கள் அடைந்துள்ள கற்றல் அடைவினை அறிந்து கொள்வதற்காக மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசால் அடைவு தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் SLAS (State level Achievement Survey) எனப்படும் இத்தேர்வினை தமிழ்நாடு அரசு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் நடத்துகிறது. 

அந்தந்த வகுப்புகளில் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய அடைவு திறன், முழுமையான முறையில் மாணவர்கள் பெற்றுள்ளார்களா என சோதிப்பதற்காகவும், மாணவர்களின் கற்றலின் இடையே காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்காகவும், கற்றல் கற்பித்தலில் குறிப்பிட்ட இலக்கினை வரையறுப்பதற்காகவும், மாவட்டங்கள் இடையே மாணவர்கள் பெற்றுள்ள அடைவினை ஒப்பீடு செய்வதற்காகவும், இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 

இத்தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பீடுகளைப் பொறுத்து இனிவரும் காலங்களில் பாடத்திட்டம் வடிவமைத்தல், கற்பித்தல் அணுகுமுறைகளை மாற்றி அமைத்தல், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் ஆகியவை திட்டமிடப்பட உள்ளன. மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி சதவீதத்தில் அதிக அக்கறை காட்டுகிற நாம், தொடக்க நிலை வகுப்பு மாணவர்களின் கற்றல் தேர்ச்சியிலும் அக்கறையோடு, ஆசிரியர்களின் பங்களிப்பு முழுமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் நடைபெறும் இத்தேர்வு, நமது மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடைபெற்றது. 

மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான அடைவு தேர்வு 04.02.2025 அன்றும், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அடைவு தேர்வு 05.02.2025 அன்றும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அடைவு தேர்வு 06.02.2025 அன்றும் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் SLAS தேர்வு 517 அரசு பள்ளிகள், 292 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 809 பள்ளிகளுக்கு நடைபெற்றது. இந்த தேர்வில் 3, 5 மற்றும் 8-ம் வகுப்பை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. 

அதன்படி நமது மாவட்டத்தில் 8506 மாணவியர்களும், 8581 மாணவர்களும் தேர்வு எழுதினார்கள். இதில் 66.55 சதவீதம் பெற்றுள்ளது. இந்த தேர்வை தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 9 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்களுக்கு நடத்தப்பட்டுள்ளது. அதில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தை பிடித்தது பெருமையாக உள்ளது. அதற்காக உழைத்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

மேலும் தக்கலை, திருவட்டார், குருந்தன்கோடு, கிள்ளியூர், இராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம், மேல்புறம், தோவாளை உள்ளிட்ட வட்டார கல்வி நிலையங்கள் SLAS தேர்வில் நல்ல தரநிலையில் உள்ளனர். ஆனால் முன்சிறை வட்டம் தரநிலையில் பின்தங்கி உள்ளது. எனவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தனிகவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்த தேர்வு தொடர்பான ஆய்வு கூட்டம் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக நான் நடத்தி வருகிறேன். 

22-வது மாவட்டமாக கன்னியாகுமரியில் இன்று ஆய்வு நடத்துகிறேன். மேலும் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக நான் சென்று ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு என்னென்ன தேவைப்படுகிறது என்ற விவரங்களையும் கேட்டறிந்து வருகிறேன். நான் தமிழ்நாட்டிற்குட்பட்ட பல்வேறு இடங்களுக்கு ஆய்வில் செல்லும்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் கணித மரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து கணித சூத்திரங்கள் எழுதி தொங்க விடப்பட்டுள்ளது. 

இந்த புதுமையான யோசனை குறித்து அடிக்கடி பேசுவேன். பெற்றோர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நம் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் தனி கவனம் எடுத்திட வேண்டும். தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி புகுட்டுவதில், பல்வேறு புதுமைகளை புகுத்த வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியையும், மருத்துவத்தையும் இரு கண்களாக கருதுகிறார்கள். நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வில் தமிழ்நாடு அளவில் 97.01 சதவீதம் பெற்று 5வது இடமும், அதேபோன்று 10 வகுப்பு தேர்வில் 96.24% தேர்ச்சி பெற்று தமிழ்நாடு அளவில் 4வது இடம்பிடித்துள்ளது மிகவும் பெருமைக்குரியது.

தமிழ்நாடு அரசு வகுத்துள்ள மாநில கல்விக்கொள்கை குறித்து அனைத்து கல்வி பிரிவினரும், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கல்வித்தரம் பல மடங்கு உயர்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், ஏ.ஐ. உள்ளிட்டவற்றில் ஆசிரியர்கள் தங்களை காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தி கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கும் போது ஆசிரியர்கள் அவர்களுக்கு நன்றாக புரிய வைக்க வேண்டும். 

அந்த பாடங்களையும் மாணவர்கள் உள்வாங்கி புரிந்து கொண்டு படித்திட ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் 100 சதவீதம் இலக்கை எட்ட வேண்டும். அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் அதற்கான முழு முயற்சியினையும் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தேரூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சுந்தரராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயராஜ் (இடைநிலை), ஷெர்லின் விமல் (மார்த்தாண்டம்), ரமா (தொடக்க கல்வி), அஜிதா (தனியார்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகன், வட்டார கல்வி அலுவலர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு) கலந்தாய்வு நிகழ்ச்சிக்கு வருகை தந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory