» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை; 7.5 ஹெக்டேர் பயிர்கள் சேதம் - ஆட்சியர் ஆய்வு!

திங்கள் 26, மே 2025 11:43:30 AM (IST)



குமரி மாவட்டத்தில் கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக வாழை மற்றும் ரப்பர் போன்ற பயிர்கள் 7.5 ஹெக்டேர் சேதமடைந்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட தோவாளை வட்டம் தாழக்குடி பேரூராட்சி, ஞாலம் மற்றும் செண்பகராமன் புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. வானிலை அறிக்கையின்படி நமது மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க நமது மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து வட்டங்களிலும் அனைத்து துறை அலுவலர்கள் வாயிலாக சேத தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டும் கடந்த 23.5.2025, 24.5.2025 ஆகிய இரு தினங்கள் மழையுடன் பலத்த காற்று வீசியதால் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மரங்கள் முறிந்தும், மின்கம்பங்கள் சரிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டும், வீடுகள், வாழைகள் உள்ளிட்டவைகள் பாதிக்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு துறையினர் வாயிலாக மரக்கிளைகளை உடனடியாக அப்புறப்படுத்தியும், மின்சார வாரியம் சார்பாக முறிந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்றியும், துண்டிக்கப்பட்ட மின்சாரம் சரிசெய்யப்பட்டு, மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வாழை உள்ளிட்ட விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தவற்றை குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்று தோவாளை வட்டம் ஞாலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழை தோட்டங்கள் சேதமடைந்ததை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டதோடு, விவசாயிகளிடம் சேதம் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் சேத விபரங்கள் குறித்து கணக்கெடுக்கும்படி துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மரம் முறிந்து அருகாமையில் இருந்த வீட்டின் மேல் விழுந்து வீடு சேதம் அடைந்ததை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வீட்டின் மேல் முறிந்து விழுந்த மரக்கிளையினை துரித நடவடிக்கையாக மாற்றிட தீயணைப்பு துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் சேதமடைந்த வீடுகள் குறித்து கணக்கெடுத்து, நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து செண்பகராமன் புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பலத்த காற்றினால் மின்சார கம்பங்கள் முறிந்து சேதமடைந்தை நேரில் பார்வையிட்டு புதிய மின் கம்பங்களை அமைத்து பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்கிட அறிவுறுத்தப்பட்டதோடு, நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 23.05.2025, 24.05.2025 ஆகிய தினங்களில் வீசிய பலத்த காற்றினால் - விளவங்கோடு வட்டம், திருவட்டாறு வட்டங்களில் மொத்தம் 22 வீடுகள் சேதமடைந்துள்ளது. அவற்றிற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பலத்த காற்றின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சுமார் 49 மரங்கள் முறிந்து விழுந்து தீயணைப்புத் துறையினரால் அகற்றப்பட்டது. மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 170 மின்கம்பங்கள் சேதமடைந்து அதில் 140 மின்கம்பங்கள் மாற்றம் செய்யப்பட்டது. மீதமுள்ள மின்கம்பங்கள் மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் பலத்த காற்றின் காரணமாக வாழை மற்றும் ரப்பர் போன்ற பயிர்கள் 7.5 ஹெக்டேர் சேதமடைந்துள்ளது. சேதமடைந்துள்ள பயிர்கள் கணக்கீடு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.

ஆய்வில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார், ஆய்வில் தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், துறை அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள், உட்பட பலர் கலந்து கொண்டர்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory