» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கடற்பகுதியில் ஒதுங்கும் பொருட்களை தொடக் கூடாது : பொதுமக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

செவ்வாய் 27, மே 2025 5:20:31 PM (IST)



கடற்பகுதியில் கரை ஒதுங்கும் கண்டெயினர் மற்றும் அதிலுள்ள பொருட்களை மீனவர்களோ பொதுமக்களோ தொடக்கூடாது என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (27.05.2025) MSC Elsa III என்ற சரக்கு கப்பல் குறித்து மீனவ பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- கடந்த 25.05.2025 அன்று காலை MSC Elsa III என்ற சரக்கு கப்பல் கொச்சி கடற்பகுதியில் மூழ்கியுள்ளது என்றும், 

அந்தக் கப்பலில் 600 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் (Container) உள்ளதாகவும், அக்கொள்கலனின் சரக்குகள் கடலில் பரவியுள்ளதாகவும், மூழ்கிய கப்பலின் அருகே சுமார் 2 கடல் மைல் தொலைவில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. இக்கப்பலில் இருந்து மேலும் எண்ணெய் கசிவு ஏற்படுவதற்கான சாத்திய கூறு உள்ளதாகவும், எண்ணெய் கசிவு கடற்கரையினை நோக்கி நகர்ந்து செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


MSC Elsa III என்ற சரக்கு கப்பல் முழ்கிய பகுதியானது நம்மாவட்ட எல்லையான நீரோடி மீனவ கிராமத்திலிருந்து சுமார் 265 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. எனவே, கண்டெயினரில் உள்ள எண்ணெய் கழிவுகள் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட கடற்கரை கிராமங்களில் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. எனவே, இது குறித்து மாவட்ட நிர்வாகம் துரிதமாக முன்னேற்பாடு பணிகள் மேற்கொண்டு வருகிறது.

கரை ஒதுங்கும் கண்டெயினர் மற்றும் அதிலுள்ள பொருட்களை மீனவர்களோ அல்லது பொதுமக்களோ தொடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. இது குறித்து இன்று தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுக மேலாண்மை சங்க நிர்வாகக்குழுவினரிடம் இது தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. கண்டெயினர்கள் அல்லது எண்ணெய் கசிவுகள் கடலிலோ அல்லது கடற்கரையிலோ கண்டறியப்பட்டால் அது தொடர்பான விபரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் பேரிடர் மேலாண்மை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 அல்லது மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், நாகர்கோவில் தொலைபேசி எண் 8056005578 அல்லது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், தேங்காப்பட்டணம் அலைபேசி எண்.9384824286 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

மேலும், மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கடலில் எண்ணெய் கழிவுகள் கையாள்வதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் மும்பையில் உள்ள வல்லுனர்கள் மூலம் அகற்றுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன், உதவி இயக்குநர் பேரூராட்சி இராமலிங்கம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முனைவர் பாரதி, அனைத்து கடற்கரை கிராம ஊராட்சி அலுவலர்கள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory