» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
டெய்லரை குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியர் கைது: பேண்ட்டை தைக்க மறுத்ததால் வெறிச்செயல்!
சனி 24, மே 2025 8:47:27 AM (IST)
நாகர்கோவிலில் தையல் கடை உரிமையாளரை குத்திக் கொன்ற வழக்கில் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் திட்டுவிளை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்ற செல்வன் (60). இவர் நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பு அருகே செல்வம் தையல் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு தையல் கடையில் செல்வம் கத்தரிக்கோலால் குத்தி கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் இரவில் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் நேற்றுமுன்தினம் மாலை 6.45 மணிக்கு வாலிபர் ஒருவர் தையல் கடைக்குள் செல்வது போன்ற காட்சியும், சிறிது நேரம் கழித்து அந்த வாலிபர் சட்டை இல்லாமல் கடையை விட்டு பதற்றத்துடன் வெளியே வருவது போன்ற காட்சியும் பதிவாகி இருந்தது. பின்னர் வாடிக்கையாளர் ஒருவர் சுமார் இரவு 8 மணிக்கு சென்று பார்த்த போது தான் செல்வம் குத்திக் கொல்லப்பட்ட விவரம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.
இந்தநிலையில் வடசேரி பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். மேலும் கேமராவில் பதிவான ஆசாமியை போன்று இருந்தது. இதை தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், தையல் கடை உரிமையாளர் செல்வத்தை கொன்றதை அந்த ஆசாமி ஒப்புக் கொண்டார்.
மேலும் அவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா செய்துங்கநல்லூர் அருகே உள்ள கோவில்பத்து வெட்டிலாபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரமணி (37) என்பது தெரிய வந்தது. இவர் நாகர்கோவிலில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். திருமணமான இவர் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
சந்திரமணியின் பேண்ட் மிகவும் இறுக்கமாக இருந்துள்ளது. இதனால் நேற்றுமுன்தினம் மாலையில் பேண்ட்டை பிரித்து தைப்பதற்காக செல்வத்தின் கடைக்கு சென்றுள்ளார். அப்போது மாற்றி தைக்க முடியாது என செல்வம் கூறியுள்ளார். இதனால் செல்வத்திற்கும், சந்திரமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சந்திரமணி அங்கிருந்து கோபத்துடன் சென்றுள்ளனர்.
ஆனால் செல்வத்தின் மீதான கோபம் சந்திரமணிக்கு தணியவில்லை. இதனால் தையல் கடை உரிமையாளருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்த அவர் சிறிது நேரத்தில் மீண்டும் தையல் கடைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற வேகத்தில் திடீரென கத்தரிக்கோலை எடுத்து செல்வத்தை சராமரியாக குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத செல்வம் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து துடிதுடித்து பரிதாபமாக இறந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சொந்த ஊருக்கு தப்பி சென்று விடலாம் என்ற மனநிலையில் வடசேரி பஸ்நிலையத்துக்கு செல்ல முயன்ற போது போலீசாரிடம் சிக்கினார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அகஸ்தீஸ்வரம், இராஜாக்கமங்கலம் பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகள் : ஆட்சியர் ஆய்வு
சனி 24, மே 2025 10:36:54 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் படகு ஓட்டுநர் பயிற்சி தொடக்கம்!
வெள்ளி 23, மே 2025 5:52:30 PM (IST)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 23, மே 2025 5:18:23 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை : போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 23, மே 2025 12:39:23 PM (IST)

குமரி பகவதியம்மன் கோயில் வைகாசித் திருவிழா: கால்நாட்டு விழா
வெள்ளி 23, மே 2025 12:36:55 PM (IST)

ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வுக்கு அபராதம்
வெள்ளி 23, மே 2025 12:01:43 PM (IST)
