» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் படகு ஓட்டுநர் பயிற்சி தொடக்கம்!

வெள்ளி 23, மே 2025 5:52:30 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஓருவார கால உள்வளாகப் ‘‘படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் பயிற்சி இன்று தொடங்கியது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையானது, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் நடத்தும் ‘‘படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி" என்ற ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சியானது 23.05.2025 முதல் 30.05.2025 வரை நடைபெற உள்ளது.

இதன் துவக்க விழா இன்று சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள உதவி இயக்குநர், தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இப்பயிற்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த 25 மீனவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டார்கள். மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ச. மாரியப்பன் வரவேற்புரை மற்றும் பயிற்சி விளக்கவுரையாற்றினார். துவக்க விழாவிற்கு தூத்துக்குடி தமிழ்நாடு கடல்சார் பயிற்சிக் கழகம் முதல்வர் கேப்டன் ஜே. மோகன்குமார், தலைமையேற்றார். 

அவர் தம் தலைமையுரையில் வணிக கப்பல்களில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அம்சங்களை தங்களின் ஆழ்கடல் படகுகளில் பயன்படுத்தவேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார். ஏனெனில் தற்போதைய ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வணிகக்கப்பல்கள் பயணிக்கும் தொலைதூர கடலில்களில் மீன்பிடித்து வருகின்றனர் என்பதனை அறிவுறுத்திப் பேசினார். மேலும் உயிர்பாதுகாப்பு உபகரணங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

சின்னமுட்டம், தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மீன்வள ஆய்வாளர், வெ.மரிய விவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தம் சிறப்புரையில் இப்பயிற்சியானது கடலில் இருக்கும்போது படகு என்ஜினில் ஏற்படும் சிறிய பழுதுபார்ப்புகளின் குறைபாடுகளை மீனவர்களே சரிசெய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் இப்பயிற்சினை நடத்தியதற்காக மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை பாராட்டினார். ச. பத்ரகாளி, காவல் ஆய்வாளர், கடல் அமலாக்கப் பிரிவு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். உதவிப் பொறியாளர் அ. அந்தோணி மைக்கேல் பிரபாகர் நன்றியுரை ஆற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory