» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்குழந்தை கொடூர கொலை: தாய், 3 வாலிபர்கள் கைது

வெள்ளி 25, ஏப்ரல் 2025 7:35:07 PM (IST)

திசையன்விளை அருகே குழந்தையை கொலை செய்த வழக்கில் தாய் மற்றும் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள துவரம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சரத். இவரது மனைவி பிருந்தா (25). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தர்ஷினி என்ற 2½ வயது பெண் குழந்தை உள்ளது. சரத் கோவையில் உள்ள ஒரு பொம்மை கடையில் வேலை பார்த்து வருகிறார். 

இதனால் பிருந்தா தனது குழந்தையுடன் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன் குளத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பிருந்தா நடுவக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த தனது குழந்தை தர்ஷினி இறந்து விட்டதாக கூறினார். அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த பெற்றோர், உடனே குழந்தையை திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதேநேரத்தில் சிறுமியின் உதடு, கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்ததால் டாக்டர்கள் சந்தேகம் அடைந்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சிறுமி உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பிருந்தாவை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில் சில வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்தபோது இடையூறாக இருந்ததால் சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது. காதல் திருமணம் செய்து கொண்ட போதிலும், பிருந்தாவுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. 

அவ்வப்போது அவர்களுடன் தனிமையான இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அப்போது குழந்தையை தனியாக வீட்டில் விட்டு விட்டு செல்ல முடியாது என்பதால் குழந்தையையும் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திசையன்விளை அருகே உள்ள துவரம்பாடு பகுதியை சேர்ந்த ஐஸ்கிரீம் கடை நடத்தி வரும் வாலிபரான லிங்கசெல்வம் (28) என்பவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முத்துசுடர் (28), பெஞ்சமின் (28) ஆகியோருடன் மதுபோதையில் பிருந்தா வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து குழந்தையுடன் பிருந்தாவை 3 பேரும் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் திசையன்விளையை அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தில் இருட்டு நிறைந்த பகுதியில் அந்த வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது சிறுமி தர்ஷினி அழுதுள்ளார். உடனே அவர்களில் 2 வாலிபர்கள் தர்ஷினியை சற்று தூரத்திற்கு அழைத்து சென்று தின்பண்டம் கொடுத்துள்ளனர்.

மேலும் அவர்கள் 2 பேரும் அங்கிருந்தபடி மது குடித்துக்கொண்டு இருந்தனர். சிறுமி தின்பண்டம் சாப்பிட்டதும் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். போதையில் இருந்த வாலிபர்கள், சிறுமி என்றும் பாராமல் குளிர்பானத்தில் மதுவை கலந்து சிறுமிக்கு கொடுத்துள்ளனர். அதனை குடித்த சிறுமி அழுதுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் சிறுமியின் மூக்கை பொத்தியும், தாக்கியும் கொலை செய்துள்ளனர். 

இதனால் மூச்சு பேச்சு இல்லாமல் போன சிறுமியை வாலிபர்கள் 3 பேரும் சேர்ந்து பிருந்தாவிடம் ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் தனது குழந்தை கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக பெற்றோரிடம் பிருந்தா நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து பிருந்தாவையும், குழந்தையை கொலை செய்த லிங்க செல்வன், முத்துசுடர், பெஞ்சமின் ஆகியோரையும் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory