» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நீர்நிலை சீரமைப்பு பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்

வியாழன் 24, ஏப்ரல் 2025 4:01:14 PM (IST)



குமரி மாவட்டத்திற்குட்பட்ட நீர்நிலைகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் மே மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா அறிவுறுத்தினார். 

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நீர்வளத்ஆதாரத்துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பேரூராட்சிகள் உள்ளிட்ட துறை அலுவலர்களுடான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் ஆட்சியர் அலுவலக குறள் (சிறு) கூட்டரங்கில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து மாவட்ட காண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, ஆகியோர் நீர்வளத்துறையின் சார்பில் கணபதிபுரம் பேரூராட்சி, மணவாளக்குறிச்சி தேர்வுநிலை பேரூராட்சி, பொன்மனை பேரூராட்சி, காட்டுப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்து, வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள். 

அதனடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கல்லுக்கட்டி ஆலங்கால் ஓடை 6.8 கி.மீட்டர் நீளத்திற்கு ரூ.5 இலட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மணவாளக்குறிச்சி தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட சேரமங்கலம் – பெரியகுளம் மறுகால் ஓடை 4.8 கி.மீட்டர் நீளத்திற்கு ரூ.5 இலட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் நீர்நிலைகளின் கரையின் உறுதித்தன்மையினை உறுதிசெய்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட அரியம்பகோடு – பொன்மனை பி கிராமத்திற்குட்பட்ட தும்பக்கோடு பகுதியில் நிரந்தர வெள்ள தடுப்புத்திட்டத்தின் கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பில் 3 மதகுகள் சரிசெய்யப்பட்டு, கோதையாறு இடதுகரை கால்வாய் பட்டணம்கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்படும். 

மேலும் காட்டுப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட துவச்சி பகுதியில் ரூ.1.40 கோடி மதிப்பில் தோவாளை சானல் முடிவுற்ற பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, மீண்டும் பேரிடர் காலங்களில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் பக்கவாட்டு சுவர்கள் பாதுகாப்புடனும், உறுதித்தன்மையுடனும் இருப்பதை துறைசார்ந்த அலுவலர்கள் உறுதி செய்வதோடு, கண்காணித்திட வேண்டும் என துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் நீர்வளத்துறை சார்பில் நிரந்தர வெள்ளத்தடுப்பு திட்டத்தின் கீழ் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை மற்றும் செருப்பலூர் வடிநில உட்கோட்டத்தின் கீழ் 316 பணிகள் ரூ.68 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது ரூ.37 கோடி மதிப்பில் 242 பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள 174 பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தரமானதாகவும், உறுதித்தன்மையுடனும் இருப்பதை துறை சார்ந்த அலுவலர்கள் உறுதி செய்வதோடு, இப்பணிகளை மே மாதம் இறுதிக்குள் முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சுசீந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட தேரூர் குளத்தில் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். உரிய அளவில் வண்டல் மண் எடுப்பதை உறுதிசெய்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். 

மேலும் அகஸ்தீஸ்வரம் வட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரத்தில் பகுதியில் அரசு நிலத்தினை ஆக்கிரமித்து குடியிருப்பு அமைந்துள்ள நிலமில்லாதவர்களுக்கு ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தி இலவச பட்டா வழங்குவது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடப்பட்டது. அவர்களில் தகுதியானவர்களுக்கு பட்டா வழங்க வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செண்பகராமன்புதூர் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கட்டப்பட்டு வரும் வீட்டின் அடிப்படை வசதிகள், கட்டுமான பணிகளின்தரம் உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொண்டதோடு, கட்டுமான பணிகள் தொய்வின்றி நடைபெற பயனாளிக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பணிகளை தரமானதாகவும், உறுதித்தன்மையுடன் அமைத்திடுவதை துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட காண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா தெரிவித்தார்.

ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, நீர்வள ஆதாராத்துறை செயற்பொறியாளர் அருள்சன்பிரைட், வேளாண்மை இணை இயக்குநர் ஜெங்கின் பிரபாகர், கோதையாறு வடிநிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர்கள் வின்ஸ்டன் லாரன்ஸ் (தக்கலை), செல்வ உமா (இரணியல் பாசனப்பிரிவு), கதிரவன் (தக்கலை பாசன சிறப்பு பிரிவு), மூர்த்தி (கோதையாறு), தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சரண்யா, வட்டாட்சியர்கள் முருகன் (அகஸ்தீஸ்வரம்), ராஜாசேகர் (தோவாளை), ஜாண் கெனி (கல்குளம்), கந்தசாமி (திருவட்டார்), ஜூலியன் ஹூவர் (விளவங்கோடு), துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory