» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் பொதுமக்கள் மனு அளிக்கலாம்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 5, நவம்பர் 2024 12:29:28 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுவினரிடம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு (2024-2025) இன்று (05.11.2024) வருகை புரிந்து, நமது மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளவுள்ளார்கள்.
அதனைத்தொடர்ந்து நாளை (06.11.2024) காலை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டகலைத்துறை, கால்நடை பாரமரிப்பு நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நெடுஞ்சாலை துறை, வனத்துறை, கனிமவளத்துறை, சிறைச்சாலைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்கள்.
அதனைத்தொடர்ந்து பிற்பகல் 1.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் வைத்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார்கள். எனவே மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் திரு.எஸ்.காந்திராஜன் அவர்களிடம் அளிக்கலாம். மேலும் காலையில் நடைபெற்ற ஆய்வுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளவுள்ளார்கள். என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.