» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி: ஆட்சியர் உடனடி உதவி!
திங்கள் 2, டிசம்பர் 2024 12:50:46 PM (IST)
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மயங்கி விழுந்த மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை வழங்க ஆட்சியர் உதவினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வந்த மூதாட்டி மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மூதாட்டிக்கு முதல் உதவி வழங்க உதவினார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்ததோடு மூதாட்டியின் கோரிக்கை மனுவுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 383 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைத்துறையில் உறுப்பினராக பதிவுபெற்று இயற்கை மரணம் அடைந்த 17 மாற்றுத்திறனாளிகளின் ஈமச்சடங்கு நிதி உதவித்தொகை தலா ரூ.17,000 வீதம் மொத்தம் ரூ.2.89 இலட்சம் மதிப்பில் காசோலைககளை அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.காளீஸ்வரி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சேக் அப்துல்காதர், உதவி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாரதி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.