» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தன்னம்பிக்கையோடு இருந்தால் உலகத்தில் எதையும் சாதிக்கலாம்: ஆட்சியர் பெருமிதம்
செவ்வாய் 3, டிசம்பர் 2024 4:10:57 PM (IST)
மாற்றுத்திறன் படைத்தவர்கள் தன்னம்பிக்கையோடு இருந்தால் உலகத்தில் எதையும் சாதிக்கலாம் என உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று (03.12.2024) மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி தெரிவிக்கையில்- 1992 -ம் ஆண்டு முதல் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் வருடந்தோறும் டிசம்பர் 3ம் நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மாற்றுத்திறன் படைத்தவர்களை மாற்றுத்திறனாளிகள் என அழைக்க வேண்டுமென தெரிவித்ததோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் மற்ற நபர்களுக்கு இணையாக அனைத்து வகையிலும் வலுபெற வேண்டுமென்று தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி மாற்றுத்திறனாளிகளுக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை, மனவளர்ச்சி குன்றியோருக்கு பராமரிப்பு உதவித்தொகை, தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை, தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவருக்கான பராமரிப்பு உதவித்தொகை, சுய வேலைவாய்ப்பு (வங்கிக்கடன்), மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பார்வையற்றவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை, வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத்தொகை,
அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மூன்று சக்கரசைக்கிள், சக்கர நாற்காலி, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு சக்கர நாற்காலி, காதொலி கருவி, கருப்பு கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல் மற்றும் பிரெய்லி கைகடிகாரம், நவீன செயற்கை அவயம், செயற்கை அவயம், முடநீக்கு சாதனம் (காலிபர்), ஊன்றுகோல், கை, கால் பாதிக்கப்பட்டவருக்கான திருமண உதவித்தொகை,
பார்வையற்றவருக்கான திருமண உதவித்தொகை, செவித்திறன் குறைவுடையோருக்கான திருமண உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் நலவாரிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சைப் பிரிவு போன்றவற்றை மிகச்சிறப்பாக செயல்படுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலக கட்டிடங்களில் டிசம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை ஊதா நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மாற்றுத்திறன் படைத்த பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மாநில அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கி மிகச்சிறப்பாக கொண்டாடடிட அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளை கொண்டாடும் விதமாக பார்வை திறன் குறைபாடுடைய செவித்திறன் குறைபாடுடைய, மன வளர்ச்சி குன்றிய மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து தொண்டு நிறுவனங்கள் சிறப்பு பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனை கண்காட்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும் மாற்றுத்திறன் படைத்தவர்கள் மற்றவர்களை போல் சமுதாயத்தில் சிறந்தவர்களாக விளங்கிடும் பொருட்டு அவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்க வேண்டும். மாற்றுத்திறன் படைத்தவர்கள் சுயதொழில், உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு விதங்களில் தங்களையும் தங்களது வாழ்வாதாரத்தையும் உயர்த்தி கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளின் கீழ் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் தாங்கள் பயனடைந்து, வாழ்வில் முன்னேற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இன்று நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறன் படைத்த பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தனித்திறமைகளையும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் திறமைகளை காணும்போது உள்ளம் பெருமிதம் படுவதோடு, கண்களில் நீர் பணிக்கிறது. இந்த நல்ல விழாவில் பங்கேற்றத்தில் மிகவும் பெருமையாக கருதுகிறேன்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறாத மாணவ மாணவியர்களும் தங்களது மனதை தளர விடமால் தங்களுக்கு விருப்பமான செயல்களில் தன்னம்பிக்கையோடு ஈடுப்பட்டால் வாழ்வில் முன்னேறுவதோடு, சமுதாயத்தில் சிறந்தவர்களாக உருவாக முடியும். எனவே ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையோடு, வெற்றி பாதையில் கடந்து செல்ல வாழ்த்துக்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறன் படைத்த மாணவ மாணவியர்களுடன் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தினை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு பாலசுப்பிரமணியம், துணை ஆட்சியர் (பயிற்சி) ப்ரியா, திறன் மேம்பாடு உதவி இயக்குநர் லட்சுமி காந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செந்தில்வேல் முருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாரதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தூர் முருகன், ஒசூர் மேலாளர் சுப்பிரமணியம், தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறன் மாணவ மாணவியர்கள், மாற்றுத்திறன் சங்கங்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.