» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கனிமம் பிரித்தெடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு: கடற்கரை கிராமங்களில் மனித சங்கிலி போராட்டம்

திங்கள் 21, அக்டோபர் 2024 10:59:56 AM (IST)



மணலில் இருந்து கனிமம் பிரித்தெடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் அரியவகை மணல் ஆலை இயங்கி வருகிறது. இந்த மணல் ஆலைக்கு கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட மிடாலம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் 1,144 ஹெக்டர் நிலத்தில் மணல் எடுக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்து அறிவித்தது. முதற்கட்டமாக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையறிந்த மீனவ மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இந்தநிலையில் கருத்து கேட்பது கூட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. எனினும் மீனவர்கள் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அணுக்கனிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் கருத்துகேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அரியவகை மணல் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான இடங்களில் காலை 9 மணி முதல் 10 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

தூத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட சின்னத்துறை முதல் இரையுமன்துறை வரை உள்ள 4 கிராமங்ளை சேர்ந்த மீனவ மக்கள் ஒன்றிணைந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையோரம் நீண்ட வரிசையில் மனித சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று அரசுக்கும், மணல் ஆலைக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தை ஒவ்வொரு மீனவ கிராமங்களிலும் அந்தந்த பங்குதந்தையர்கள் ஜிபு(சின்னத்துறை), பிரடி சாலமன்(தூத்தூர்), பென்சீகர்(பூத்துறை), சூசை ஆன்றணி(இரையுமன்துறை) ஆகியோர் தலைமையில் பங்கு மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

குளச்சலில் நடந்த போராட்டத்தை பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக புனித காணிக்கை அன்னை ஆலயத்தின் முன்பு இருந்து மீனவர்கள் பேரணியாக பீச் சந்திப்பு வரை சென்றனர். கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு இயக்குனர் டங்ஸ்டன், குளச்சல் பங்குதந்தை ஜெகன் மற்றும் புனித காணிக்கை அன்னை திருத்தல நிர்வாகிகள், விசைப்படகு சங்க நிர்வாகிகள், துறைமுக வியாபாரிகள், ஏலக்காரர்கள் அமைப்பு, பக்தர்கள் சபை, அனைத்து அமைப்பினர் உள்பட திரளான மீனவர்கள் கலந்துகொண்டனர். மீனவர்கள் மனித சங்கிலியாக சைமன்காலனி முதல் கொட்டில்பாடு வரை கைகோர்த்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த மனித சங்கிலி போராட்டத்தை அணுக்கனிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்க துணைத்தலைவர் ஜாண்சன் ஒருங்கிணைத்தார்.

இதுபோல் குறும்பனையில் புனித இக்னேசியஸ் ஆலயம் சார்பில் ஊர்மக்கள் வாணியக்குடி முதல் ஆலஞ்சி வரை திரண்டு நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை பங்குதந்தை ஸ்டீபன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பங்கு பேரவை நிர்வாகிகள், அனைத்து அமைப்புகள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை குளச்சல் துணைபோலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) மதியழகன், இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் ஈடுப்பட்டனர்.

தேங்காப்பட்டணம் துறைமுக பகுதியை சுற்றியுள்ள கடற்கரை கிராமங்களான முள்ளூர்துறை, ராமன்துறை, இனயம் புத்தன்துறை, ஹெலன் நகர், ஆகிய பகுதிகளை சேர்ந்த கடற்கரை கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேங்காப்பட்டணம் துறைமுக வாசலில் நடைபெற்ற போராட்டத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் சார்பாக யூனியன் கவுன்சிலர் சித்திக் தலைமை தாங்கினார்.

போராட்டத்தின்போது தாது மணல் பிரித்தெடுப்பதன் மூலம் வரும் காலங்களில் நமக்கும், இளம் தலைமுறையினருக்கும் ஏற்படப்போகும் கொடியநோய் குறித்து விரிவாக பேசப்பட்டது. போராட்டத்தின்போது மணல் ஆலையை உடனே மூட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா ஆலயம் அருகே மனித சங்கிலி நடைபெற்றது. ேபாராட்டத்தில் பங்கு பேரவை துணைத்தலைவர் டாலன், செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர் ரூபன், துணை செயலாளர் டெமி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல சிலுவை நகர் திருச்சிலுவை ஆலயம் முன் பங்குதந்தை புஷ்பராஜ் தலைமையிலும், வாவத்துறை ஆரோக்கிய நாதர் ஆலயம் முன் பங்குதந்தை அந்தோணி பிச்சை தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு வட்டார முதன்மை பணியாளர் எம்.சி.ராஜன் தலைமை தாங்கினார். தேவசகாயம் மவுண்ட் திருத்தல பங்கு தந்தை லியோன் கென்சன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் பங்கு தந்தையர்கள் சலீன், சேவியர், பங்குபேரவை துணைத்தலைவர் சிலுவைதாசன், செயலாளர் தேவசகாய டேவிட், பொருளாளர் ஜெனட் சதீஷ்குமார், துணைச்செயலாளர் சகாய செலின் உள்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பள்ளம் அன்னை நகரில் அணுக்கனிம திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கு மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள கடற்கரையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அணுக்கனிம திட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் கீழமணக்குடியில் ஆலயம் முன்பு நேற்று காலையில் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டனர். பின்னர், அவர்கள் சாலையில் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்தும், அணுக்கனிம திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர். திட்டுவிளை அருகே மார்த்தால் பகுதியில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசியர் ஆலய வளாகத்தில் பங்கு இறை மக்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory