» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மீண்டும் பஸ்கள் இயக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி
வியாழன் 17, அக்டோபர் 2024 10:18:11 AM (IST)
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களை தொடர்ந்து பஸ்களும் இயக்க அனுமதிக்கப்பட்டது.
மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் கடந்த 2-ந்தேதி சாலையில் ஜல்லிகள் பெய்ந்து பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து அன்று முதல் மேம்பாலம் வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதைதொடர்ந்து பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் கான்கிரீட் மற்றும் தார் போட்டு சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்றது.
அந்த பணிகள் நிறைவடைந்தை தொடர்ந்து 13 நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் மேம்பாலத்தில் கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டன. ஆனால் பஸ்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும், கனரக வாகனங்கள் மேம்பாலம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டதுடன் மாற்றுபாதை வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து மேம்பாலம் வழியாக பஸ்களும் இயக்க அனுமதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள், கேரள பஸ்கள், ஆம்னி பஸ்களும் மேம்பாலம் வழியாக இயங்கப்பட்டன. இதனால் கடந்த சில நாட்களாக மார்த்தாண்டத்தில் ஏற்பட்டு வந்த கடுமையான போக்குவரத்து நெருக்கடி சற்று குறைந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.