» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கடல் சீற்றம்: முகாம்களில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆட்சியர் ஆறுதல்!
வியாழன் 17, அக்டோபர் 2024 11:26:52 AM (IST)
கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள அழிக்கால், பிள்ளைத்தோப்பு கடற்கரை கிராம பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரம் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட அழிக்கால் மற்றும் பிள்ளைத்தோப்பு கடற்கரை பகுதிகள் மீனவ மக்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை கேட்டறிந்து தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட அழிக்கால் மற்றும் பிள்ளைத்தோப்பு கடற்கரை பகுதியில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடல்சீற்றம் அதிகமாக ஏற்பட்டு கடற்கரை பகுதிகள், தெருக்கள் மற்றும் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.
எனவே அழிக்கால் பகுதியை சார்ந்த 44 குடும்பங்கள் அழிக்கால் சமுதாய நலக்கூடத்திலும், பிள்ளைத்தோப்பு பகுதியை சார்ந்த 31 குடும்பங்கள் பிள்ளைத்தோப்பு வளனார் திருமண மண்டபத்திலும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அழிக்கால் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 44 குடும்பங்களில் உள்ள 138 நபர்களுக்கும், பிள்ளைத்தோப்பு வளனார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 31 குடும்பங்களிலுள்ள 97 நபர்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
அழிக்கால் மற்றும் பிள்ளைத்தோப்பு குடியிருப்பு பகுதி மற்றும் வீடுகளுக்குள் புகுந்த கடல்நீர் டீசல் எஞ்சின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே கடலோர மீனவர்கள் அச்சப்பட தேவையில்லை. நீங்கள் வைத்துள்ள அனைத்து கோரிக்கைகளும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இது போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் கடலோரப்பகுதிகளுக்கு செல்லுவதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, அழிக்கால் மற்றும் பிள்ளைத்தோப்பு பகுதிகளில் உள்ள சமூகநலக்கூட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்களை நேரில் சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை கேட்டறிந்ததோடு, பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று மீனவ குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.