» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவேன்: விஜய் வசந்த் வாக்குறுதி

திங்கள் 15, ஏப்ரல் 2024 11:20:38 AM (IST)குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் தெரிவித்தார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த் மாவட்டம் முழுவதும் சென்று மக்களிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று அகஸ்தீஸ்வரம், காமராஜ் நகர், ராமன்புதூர், சந்தையடி, இலந்தையடிவிளை, சாமிதோப்பு, செட்டிவிளை, பொற்றையடி, வைகுண்டபதி, கொட்டாரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தின் போது விஜய்வசந்த் பேசியதாவது: அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு தந்த அம்பேத்கரின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன். மேலும் இன்று (அதாவது நேற்று) எனது வாழ்வில் மிகவும் முக்கியமான நாள். எனது அன்பு தந்தை எச்.வசந்தகுமார் பிறந்த நாள் ஆகும்.எனது தந்தை விட்டுச் சென்ற மக்கள் பணியை தொடர்வதற்கு அவர் மேல் வைத்திருக்கும் பாசத்தால் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

குமரி மாவட்டத்தை வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற என் தந்தையின் கனவை நிறைவேற்ற உங்களுக்காக இன்னும் பல பணிகள் செய்ய வேண்டும். இதற்காக நான் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறேன். மாவட்டத்தில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாராளுமன்ற உறுப்பினராக நான் வாங்கிய அனைத்து சம்பளப் பணத்தையும் கொடுத்துள்ளேன்.

குமரி மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை நிறைவேற்றும் வகையில் எனது தந்தை தொடங்கி வைத்த வேலைவாய்ப்பு முகாமை தொடர்ந்து நடத்தி சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளேன். குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். எனக்கு நீங்கள் அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மாநகர மேயர் மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. எச்.வசந்தகுமாரின் 74- வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் குமரி மாவட்ட மக்களுடன் உரையாடுவது போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையில்) தயாரிக்கப்பட்ட காணொலியை தமிழ்ச்செல்வி வசந்தகுமார் வெளியிட்டார். நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., சகோதரர் வினோத் குமார், காமராஜ், எச்.வசந்தகுமாரின் தங்கை வசந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Apr 16, 2024 - 07:45:31 AM | Posted IP 172.7*****

குமரில மேற்குத் தொடர்ச்சி மலைகளை இடித்து கொண்டிருக்கும்போது கோமாவில் இருந்துட்டு அதுல ஒலக சுற்றுலா தளமாம். உங்க தந்தை ஆரம்பித்து விட்டு போன வேலையை மட்டும் பாருங்க, அரசியலுக்கு வந்ததும் புரோயஜனம் இல்லை.

அதுApr 15, 2024 - 11:48:56 AM | Posted IP 162.1*****

ஆல்ரெடி உலகதரம் வாய்ந்த சுற்றுலா தலம் தான் தல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory