» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
போரை நிறுத்துமாறு எந்த நாட்டு தலைவரும் கூறவில்லை : மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்
புதன் 30, ஜூலை 2025 8:40:20 AM (IST)
ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் இந்தியா கொடுத்த பதிலடியை தாங்க முடியாமல் பாகிஸ்தான் நாடுதான் கதறியது. போரை நிறுத்துமாறு எந்த நாட்டு தலைவரும் கூறவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரை குறிப்பிடாமல் மக்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.

அவற்றுக்கு ராஜ்நாத்சிங்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் விளக்கம் அளித்து பேசினர். நேற்றும் இந்த விவாதம் தொடங்கியது. இதில் கலந்து கொண்டு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். அவர்கள் மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர். அவை அனைத்துக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்தார். இந்த விவாதம் காரசாரமாக இருந்தது.
தொடர்ந்து பிரியங்காவும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் பேசினர். அப்போது அவர்கள் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து, கேள்விகளை எழுப்பினர். அப்போது அவையில் ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடி நேற்று மாலை தனது பதிலுரையை தொடங்கினார். உணர்ச்சிகளின் குவியலாக இருந்த அவரது பேச்சில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டையும் குறைகூறினார். பிரதமர் மோடி பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் நிலையை விளக்குகிறேன். இந்திய மக்களுக்கு எதிரானவர்களிடம் கண்ணாடியை காட்டுகிறேன். ஆபரேஷன் சிந்தூரின் பின்னணியை அறியாதவர்களுக்கு விளக்கம் தருகிறேன். பஹல்காமில் மதத்தின் பெயரால் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்த தாக்குதலுக்கு 22 நிமிடங்களில், பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டினோம். பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து, அங்கு தாக்குதல் நடத்தினோம். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தோம். இப்போது பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. இந்தியாவின் அதிரடி தாக்குதல் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், டிரோன்கள் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. நமது முப்படைகளும் கூட்டாக இணைந்து இந்த தாக்குதலை நடத்தின. பாகிஸ்தானால் இனி அணு ஆயுத அச்சுறுத்தலை விடுக்க முடியாது. பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்கள் இனி எடுபடாது. அணு ஆயுதங்களுக்கு இந்தியா ஒரு போதும் அஞ்சாது.
ஒரே இரவில் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத இயக்க முகாம்களை துவம்சம் செய்துவிட்டு திரும்பினர் நம் ராணுவத்தினர். இந்தியாவின் பதிலடி தாக்குதலை பாகிஸ்தானால் சமாளிக்க முடியவில்லை. இந்தியாவால் தாக்கப்பட்ட பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.) உள்ளன.
பதிலடி தாக்குதல் நடத்த நமது ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருந்தோம். எங்கு, எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்ற சுதந்திரம் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. எப்படி திட்டமிட்டு இருந்தோமோ, அப்படியே துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது. நமது வீரர்களின் பதிலடியாக பாகிஸ்தான் கலக்கம் அடைந்தது. அவர்களால் நமது தாக்குதலை தடுக்க முடியவில்லை. அதே நேரம் பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை உலகத்துக்கு அம்பலப்படுத்தினோம்.
ஆபரேஷன் சிந்தூர் முதல் சிந்து நீர் ஒப்பந்தம் வரை நாம் சரியாக நடத்தினோம். எந்தவொரு தாக்குதலுக்கும் பெரும் விலை கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரியும். பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரிகளுக்கும் தெரியும். நாம் தாக்கினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அவர்களுக்கு தெரியும். நமது பதிலடியால் அவர்கள் நிலைகுலைந்துவிட்டனர். தாக்குதலை சமாளிக்க முடியாமல் கெஞ்சினர்.
மே 9-ந் தேதி இரவு, அமெரிக்க துணை ஜனாதிபதி (ஜேடி வான்ஸ்) என்னை 3, 4 முறை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் நான் நமது ராணுவ தளபதிகளுடன் முக்கிய ஆலோசனையில் இருந்ததால் அப்போது பேசவில்லை. நான் அவரை மீண்டும் அழைத்தபோது, பாகிஸ்தானில் இருந்து ஒரு பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தார். பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கினால், எங்கள் பதிலடி மிகப்பெரியதாக இருக்கும். பீரங்கிகளைக் கொண்டு குண்டுகளுக்கு பதிலடி கொடுப்போம் என்று நான் அவரிடம் கூறினேன்.
எந்தவொரு நாட்டின் தலைவரும் இந்தியாவின் நடவடிக்கையை நிறுத்தச் சொல்லவில்லை. பயங்கரவாதிகளையும், அவர்களை ஆதரிக்கும் நாடுகளையும் தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது. இனி இதுபோன்ற தாக்குதல் நடத்தினால் இந்தியா எப்போது வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கும் என்று அவர்களுக்கு உணர்த்தியுள்ளோம். உலகில் உள்ள 193 நாடுகளில் 190 நாடுகள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தன. 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தன.
உலக நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்கு இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் இந்தியாவுக்கு கிடைக்கவில்லை. எதிர்க்கட்சியினர் என்னை குறிவைத்து தாக்கினர். நான் தோற்றுவிட்டதாக கூறி மகிழ்ச்சி அடைந்தனர். பாகிஸ்தானின் செய்தித் தொடர்பாளர்கள்போல் காங்கிரஸ் கட்சியினர் பேசுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கையை பார்த்து நாட்டுமக்கள் சிரிக்கிறார்கள்.
என்னை தாக்குவதில் எதிர்க்கட்சிகள் குறியாக இருந்ததால், இந்தியா மீதும், நமது ராணுவத்தின் வலிமை மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகள் அனைத்தும் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வரும் கருத்துபோல் உள்ளன.
ஏப்ரல் 22-ந் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, பழிவாங்க பாகிஸ்தானுக்குள் இருந்த பயங்கரவாத தளங்களை 22 நிமிடங்களுக்குள் அழித்தோம். ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது வலிமையை உலகிற்கு நிரூபித்துள்ளோம். இந்த நடவடிக்கையில் நாம் நூறு சதவீத இலக்கை அடைந்துவிட்டோம். பயங்கரவாதிகளை மண்ணோடு மண்ணாக ஒழித்துக்கட்டுவோம்.
பயங்கரவாதிகளுக்கு அவர்களே யோசிக்காத அளவுக்கு தண்டனை கொடுப்போம். பயங்கரவாதிகளை ஒழிப்பதே நாட்டு மக்களுக்கு நாங்கள் தரும் வாக்குறுதி. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்துவதற்கான சதி. அந்த முயற்சியை நமது ஒற்றுமையாலும், வலிமையாலும் முறியடித்துவிட்டோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்தத்தை நான்தான் கொண்டு வந்தேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி வந்தார். எனவே இதையே குற்றச்சாட்டாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கூறிவந்தன. இந்தநிலையில் நேற்று தனது பதிலுரையின் போது பிரதமர் மோடி, டிரம்ப் பெயரை குறிப்பிடாமல், எந்த நாட்டு தலைவரும் தாக்குதலை நிறுத்துமாறு கூறவில்லை என்று கூறினார். பிரதமர் மோடி பதிலுரையில் மொத்தம் 102 நிமிடங்கள் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாலேகான் குண்டு வெடிப்பு: பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!
வியாழன் 31, ஜூலை 2025 12:01:57 PM (IST)

நிசார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்!
புதன் 30, ஜூலை 2025 8:32:25 PM (IST)

பஹல்காம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு எதிர்க் கட்சியினர் கவலை அடைந்தனர் : அமித்ஷா
செவ்வாய் 29, ஜூலை 2025 4:50:08 PM (IST)

உ.பி.யில் நீண்ட காலம் முதல்வர் பதவி வகித்தவர் பட்டியலில் ஆதித்யநாத் முதலிடம்
செவ்வாய் 29, ஜூலை 2025 12:51:37 PM (IST)

ஏமனில் நிமிஷாவின் மரண தண்டனை ரத்து : மதபோதகர் தகவல் - மத்திய அரசு மறுப்பு!
செவ்வாய் 29, ஜூலை 2025 11:01:05 AM (IST)

நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடியபோது மாரடைப்பால் இளைஞர் திடீர் மரணம்...!
திங்கள் 28, ஜூலை 2025 5:20:08 PM (IST)
