» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கன்னடம் பேச முடியாது என வாக்குவாதம் செய்த வங்கி அதிகாரி பணியிட மாற்றம்: சித்தராமையா

புதன் 21, மே 2025 4:22:19 PM (IST)



கர்நாடகாவில் கன்னடம் பேச மறுத்த எஸ்பிஐ வங்கி அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். 

சூர்யா நகரா எஸ்பிஐ வங்கி மேலாளர் கன்னடத்தில் பேச மறுக்கும் வீடியோ வைரலாக பரவியது. அதில் "இது கர்நாடகா" என்று வாடிக்கையாளர் கூறும்போது, ​​"நீங்கள் எனக்கு வேலை கொடுக்கவில்லை" என்று அந்த அதிகாரி பதிலளிக்கிறார். வாடிக்கையாளர் "இது கர்நாடகா" என்று திரும்பத் திரும்பச் சொல்லும்போது, ​​"இது இந்தியா" என்று அவர் பதில் சொல்கிறார். மேலும், "உங்களுக்காக கன்னடம் பேச மாட்டேன்" என்றும், "இந்தி பேசுவேன்" என்றும் அந்த பெண் அதிகாரி கூறுகிறார். இதனையடுத்து இந்த வங்கிக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று அந்த வாடிக்கையாளர் கூறும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

வைரலான இந்த வீடியோவும், வங்கி அதிகாரி மீதான நடவடிக்கையும் கன்னட மொழி சர்ச்சையை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. கர்நாடகாவில் வேலை செய்து வாழும் வெளி மாநிலத்தவர்கள் உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கன்னட ஆதரவு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. அதேநேரத்தில் யாரையும் ஒரு மொழியைப் பேச கட்டாயப்படுத்தக் கூடாது என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர். 

இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அனேகல் தாலுகா, சூர்யா நகராவில் உள்ள எஸ்பிஐ கிளை மேலாளர் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை அலட்சியப்படுத்தியது என்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அதிகாரியை பணியிடமாற்றம் செய்ய எஸ்பிஐ எடுத்த விரைவான நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம்.

இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக் கூடாது. அனைத்து வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களை கண்ணியமாக நடத்த வேண்டும். அதேபோல உள்ளூர் மொழியில் பேசுவதற்கு வங்கி ஊழியர்கள் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் கன்னடத்தில் பேச முயற்சிக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கலாச்சாரம் மற்றும் மொழி உணர்திறன் பயிற்சியை கட்டாயப்படுத்த மத்திய நிதி மற்றும் நிதி சேவைகள் துறையை நான் கேட்டுக்கொள்கிறேன். உள்ளூர் மொழியை மதிப்பது மக்களை மதிப்பதாகும்" என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory